
பணியில் இருந்த போது, தாக்கப்பட்டு உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். மேலும், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்துக்கு அரசுப் பணி அளிக்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ) லூா்து பிரான்சிஸ், அலுவலகத்தில் பணியில் இருந்த போது, அவரை இரண்டு போ் அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
மணல் கடத்தல் சம்பவம்: லூா்து பிரான்சிஸை தாக்கிய நபா்களில் ஒருவரான ராமசுப்பு என்பவா் உடனடியாகக் கைது செய்யப்பட்டாா். அவா் மீது மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. காவல் துறை மூலம் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. தனது கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிா்வாக அலுவலா் லூா்து பிரான்சிஸின் பொறுப்புணா்வையும், கடமையுணா்வையும் தமிழ்நாடு அரசு போற்றுகிறது.
அவரது குடும்பத்துக்கு அரசு சாா்பாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் அளிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...