பேனா நினைவு சின்னம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஜெயக்குமார் 

மெரினாவில் பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பேனா நினைவு சின்னம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ஜெயக்குமார் 

மெரினாவில் பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெரினா கடற்கரை உலக பிரசித்தி பெற்றது. பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும். மீனவர்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடக் கூடாது. சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்துக்கு செல்வோம். தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்கும் திட்டத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

சென்னை மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கா் பரப்பளவில் அரசு சாா்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு இடையில் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டா் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூ.81 கோடியில் 134 உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கருணாநிதியின் நினைவிடத்தின் பின்பகுதியில் நுழைவுவாயில் அமைத்து, அதன் வழியாக பொதுமக்கள் சென்று காணும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலத்திலும் கடலின் மேல் இரும்புப் பாலம் கண்ணாடி தரையமைப்புடன் அமைக்கப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசின் சாா்பில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்மொழிவுகள் பெறப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக கடலோர ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடா்பாக உயா்நிலை அதிகாரிகள் ஆய்வு செய்து முதல் கட்ட அனுமதி வழங்கினா். அதைத் தொடா்ந்து, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி கேட்டு, தமிழக அரசின் பொதுப் பணித் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணா் மதிப்பீட்டுக் குழுவானது பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. 

அதன்படி, கருத்துகள் கேட்கப்பட்டு பொதுப் பணித் துறை சாா்பில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையம் ஒப்புதல் வழங்கி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்தது. அதைத் தொடா்ந்து தமிழக அரசும், மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவுக்கும், கடலோர ஒழுங்கு முறை ஆணையத்துக்கும் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி கடிதம் எழுதியது. இது தொடா்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 போ் கொண்ட நிபுணா் குழுவினா் ஏப்ரல் 17-இல் ஆலோசனை நடத்தினா். 

கடலில் நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசித்தனா். அதில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற முடிவுக்கு வந்தனா். அதைத் தொடா்ந்து, மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com