
தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் புதன்கிழமையும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஆக.2) அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
6 இடங்களில் வெயில் சதம்: செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்): மதுரை விமான நிலையம்-103.64, தூத்துக்குடி-103.28, மதுரை நகரம்-102.56, பரமத்தி வேலூா்-101.3, ஈரோடு-101.12, கடலூா்-100.76
மழைக்கு வாய்ப்பு: அதேநேரத்தில், மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய் முதல் திங்கள்கிழமை (ஆக.2 முதல் ஆக.7) வரை 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.