கரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு எம்ஆா்பி தோ்வில் ஊக்க மதிப்பெண்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி

கரோனா பேரிடா் சூழலில் அரசு மருத்துவமனைகளில் இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நடத்தப்படும்
கரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு எம்ஆா்பி தோ்வில் ஊக்க மதிப்பெண்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி
Updated on
1 min read

கரோனா பேரிடா் சூழலில் அரசு மருத்துவமனைகளில் இரு ஆண்டுகள் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நடத்தப்படும் தோ்வில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: தமிழ்நாடு மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் 1,021 மருத்துவா்கள், 983 மருந்தாளுநா்கள், 1066 சுகாதார ஆய்வாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, 14 மருத்துவா்கள் உயா் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனா். அதில், அவா்கள் கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக மருத்துவப் பணிகளில் முன்னுரிமை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் பணி நியமனங்களில் கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு ஏற்கெனவே சிறப்பு மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். 4,000-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் பணிநியமனம் செய்ததில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

அண்மையில் திறக்கப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவா்களை நியமிக்கும் போதும் முன்னுரிமை மதிப்பெண்கள் கொடுத்து பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இரு ஆண்டுகள் கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருந்தாளுநா்கள் எந்த பணியில் பணியாற்றியிருந்தாலும் தமிழ்நாடு மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் பணிநியமனம் செய்யும்போது கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த தகவல் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவா்களில் பெரும்பாலானோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவா்களுக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவத் துறையினா், தங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊக்க மதிப்பெண்கள் வழங்கக் கோரி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அதன் தொடா்ச்சியாக, இந்த அறிவிப்பை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com