செந்தில் பாலாஜி வழக்கை செப்.30-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் விசாரணை அறிக்கையை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் விசாரணை அறிக்கையை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மேலும் அவகாசம் அளித்தது.
 2014-ஆம் ஆண்டின்போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு, நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு கடந்த மே 16-ஆம் தேதி விசாரித்தது.
 அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தில் மத்திய குற்றப் பிரிவு விசாரணை அதிகாரி மேலும் விசாரணை நடத்தி இரு மாதங்களில் கூடுதல்/இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.
 இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இரு மாதங்கள் முடிவடைந்த நிலையில், விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தியுடன் மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிடுகையில், "இளநிலை பொறியாளர், உதவிப் பொறியாளர் நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்ட 5 பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.
 இதில், இளநிலைப் பொறியாளர்களுக்கான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர் பிரிவினருக்கான விசாரணை நடத்தப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. மற்ற 3 பிரிவுகளிலும் தொடர்புடைய நபர்களிடம் பல்வேறு விவகாரங்களில் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், 6 மாதங்கள்அவகாசம் தேவைப்படுகிறது' என்று கேட்டுக் கொண்டார்.
 அதற்கு மனுதாரர்கள் ஒய்.பாலாஜி, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷண், பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆகியோர் கால அவகாசம் நீட்டிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
 "உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளைச் சேர்த்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
 ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குற்றத்தை வெளிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால், இந்த ஆள்தேர்வு விவகாரத்தில் தொடர்புடையர்களிடம் விசாரணை நடத்துவதற்கான அவசியம் எழவில்லை. இதனால், கால அவகாசத்தை நீட்டிக்கக் கூடாது' என்று வாதிட்டனர்.
 இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மே 16-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு, விசாரணை ஏன் தாமதம் ஆகிறது என்பதை அறியும் வகையில் தமிழக டிஜிபி, உள்துறை செயலர் ஆஜராகும் வகையில் வழக்கை ஒத்திவைக்க உள்ளதாகக் கூறினர்.
 இதையடுத்து, தமிழக அரசிடம் அறிவுறுத்தல் பெற்றுவந்த மூத்த வழக்குரைஞர் எஸ்.ஜெய்தீப் குப்தா, 2 மாதத்தில் அறிக்கை அளிக்கும் வகையில் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள் செப்டம்பர் 30-க்குள் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளிப்பதாகக் கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com