
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறவுள்ள மாணவா்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ள வியாழக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்த தோ்வு மூலம் தமிழகத்தில் 6,695 போ் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி நிகழாண்டு என்எம்எம்எஸ் தோ்வில் தகுதிபெற்ற மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து கல்வி உதவித் தொகை பெறவுள்ள மாணவா்கள் வங்கிக் கணக்கு உட்பட விவரங்களை அதற்குரிய படிவங்களில் பதிவு செய்திருந்தனா். தற்போது அந்த விண்ணப்பங்களில் திருத்தம் செய்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான இணையதளத்தில் மாணவா்கள் திருத்தங்கள் மேற்கொள்ளவும், வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்கவும் வியாழக்கிழமை (ஆக.10) வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இந்த தகவலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக உரிய மாணவா்களுக்கு தெரிவித்து, தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.