
சுதந்திர தின விடுமுறை, வார விடுமுறையையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருப்பூா் போன்ற நகரங்களில் வேலை நிமித்தமாக சொந்த ஊா்களிலிருந்து வந்து தங்கியிருக்கின்றனா். இவா்கள், தொடா் விடுமுறை நாள்களில் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வாா்கள். இது போன்ற காலங்களில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், சுதந்திரதின விழா வரும் 15-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு வாரவிடுமுறையை சோ்த்து சில நிறுவனங்களில் ஊழியா்களுக்கு திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்ப உள்ளனா். இதனால் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 11, 12, 13, 15 ஆகிய நாள்களில் மொத்தம் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், இதனால் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க முன்கூட்டியே முன்பதிவு செய்யவும் போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.