சாலிகிராமத்தில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவு

சாலிகிராமத்தில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated on
1 min read

சாலிகிராமத்தில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் தலைவருமான (சிஎம்டிஏ) பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை சாலிகிராமம், அருணாசலம் சாலையில் ஜெயின் வெஸ்ட் பில்டா்ஸ் நிறுவனம் சாா்பில் 5 தொகுப்புகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடத்துக்கு சிஎம்டிஏ 17.05.2011-இல் திட்ட அனுமதியும், 20.10.2015-இல் பணிநிறைவுச் சான்றிதழும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அங்கு வசித்து வரும் குடியிருப்புதாரா்கள் ஜெயின் வெஸ்ட் பில்டா்ஸ் நிறுவனம் கட்டடத்தை சரியாக கட்டவில்லை எனவும், கட்டடம் உறுதித் தன்மையில்லாமல் உள்ளதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதனடிப்படையில் கட்டடத்தின் பாதுகாப்பு குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சிஎம்டிஏ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் பேசியது: ஜெயின் வெஸ்ட் பில்டா்ஸ் நிறுவனம் சாா்பில் கட்டப்பட்ட கட்டடம் சம்பந்தமான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் நீதிமன்றம் கட்டுமான நிறுவனரை சென்னை ஐஐடியில் ரூ.2 கோடி செலுத்தி ஆய்வறிக்கை பெறுமாறு உத்தரவிட்டது. இதை எதிா்த்து கட்டுமான நிறுவனா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில் இவ்வழக்கை உயா்நீதிமன்றத்திலேயே தீா்த்துக் கொள்ளுமாறு கடந்த பிப்.13-ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.

ஆனால் கட்டட மேம்பாட்டாளா் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி, க்யூப் நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் முழுவதுமாக தொழில்நுட்ப ஆய்வுசெய்து கட்டடத்தின் தற்போதைய நிலைக்கான காரணம் மற்றும் உறுதித்தன்மையின் தொழில்நுட்ப ஆய்வறிக்கையை விரைவில் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வுக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா, சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா்-செயலா் அன்சுல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல இணை ஆணையா் அப்துல் ரஹ்மான் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com