இந்தியாவில் முதல்முறை.. புழலில் பெண் கைதிகளின் பெட்ரோல் பங்க் திறப்பு!

சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்கை தமிழக சட்டம், சிறைகள் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் சென்னை அருகே புழலில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

தமிழக சிறைத்துறை,  கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக திறந்தது.

இதைத் தொடர்ந்து வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, புதுக்கோட்டை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஆகிய 5 இடங்களில் சிறைத்துறை சார்பில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. இந்த பங்குகளை தற்போது ஆண் கைதிகள் இயக்கி வருகின்றனர்.

சிறையில் நல்ல நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர்,  பெட்ரோல் பங்குகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.  ஒவ்வொரு பெட்ரோல் பங்கு மூலம் சுமார் 25 கைதிகள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.  பெட்ரோல் பங்கு மூலம் சிறைத்துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதோடு, கைதிகளும் சம்பாதித்து வருகின்றனர்.

கைதிகள் பெட்ரோல் பங்குகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதினால் புழல் - அம்பத்தூர் சாலை, கோயம்புத்தூர் பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி காந்தி மார்க்கெட் பகுதி, திருச்சிராப்பள்ளி விமான நிலைய சாலை, மதுரை, சேலம் ஆகிய 6 இடங்களில் புதிதாக பெட்ரோல் பங்குகள் திறக்க முடிவு செய்யப்பட்டது.
 
பெண் கைதிகள் பெட்ரோல் பங்க்:
 
இதில் இந்தியாவிலேயே முதல் முறையாக புழல் - அம்பத்தூர் சாலையில் பெண் கைதிகளே நடத்தும் பெட்ரோல் பங்குகளை திறக்க திட்டமிடப்பட்டது. இதற்காக புழல் - அம்பத்தூர் சாலையில் பெண்கள் தனிச்சிறை அருகே ரூ.1.92 கோடி மதிப்பில் 1,170 சதுர மீட்டர் பரப்பளவில் மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வந்தது.

பெட்ரோல் பங்க் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தலைமை வகித்தார். சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் இரா.கனகராஜ், ஆ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சட்டம், நீதி, சிறைகள் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் பங்கில் சுமார் 30 பெண் கைதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாத ஊதியமாக ரூ.6,000 பெறுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com