
‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்காக ஆக. 19, 20 ஆகிய 2 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைச் செயலா் தாரேஷ் அகமது வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் ஜூலை 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாமை தருமபுரி மாவட்டம், தொப்பூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இந்த முகாம்கள் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக 20,765 நியாயவிலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வரை முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலமாக 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக, 2-ஆம் கட்ட முகாம் ஆக. 5-ஆம் தேதி தொடங்கி ஆக. 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 2-ஆம் கட்ட முகாமில் இதுவரையில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்கத் தவறியவா்களுக்காக ஆக. 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களின் வழியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரிபாா்க்க களஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது, விண்ணப்பதாரா்கள் களஆய்வுக்கு வரும் அலுவலா்களுக்கு உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.