நீட் தேர்வுக்குப் பின்னால் சதி; ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளேன்: மாணவியின் தந்தை பேட்டி

நீட் தேர்வுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும் தனது மகளுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக 20  லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் மாணவியின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். 
நீட் தேர்வுக்குப் பின்னால் சதி; ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளேன்: மாணவியின் தந்தை பேட்டி

நீட் தேர்வுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும் தனது மகளுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக 20  லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் மாணவியின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கலந்துரையாடினார். 

அப்போது, தமிழ்நாட்டில் நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் தருவீர்கள்? என மாணவியின் தந்தை ஒருவர், ஆளுநர் ஆர். என். ரவியிடம் கேள்வி கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளை கேட்ட நிலையில் அவரிடமிருந்து மைக் பறிக்கப்பட்டுள்ளது, மேலும் அவரை உட்காரும்படி மிரட்டும் தொனியில் ஆளுநர் பேசியதாகக் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் நீட் விலக்குக்கான மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். 

அதன்பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வெளியே மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது பேசிய அவர், 'நீட் தேர்வில் எனது மகள் 878 ஆவது ரேங்க் பெற்றுள்ளார். 623 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளார். 

நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல்தான் மாணவர்கள் திணறிக்கொண்டிருந்தார்கள். நீட் தேர்வுக்குப் பின்னால் ஒரு சதி இருக்கிறது. 

பள்ளிகளில் பாடத்திட்டத்தை வைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதில்லை. தனியார் பயிற்சி நிறுவனங்களை வைத்துதான் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி அளிக்கின்றனர். அதற்கென தனியே கட்டணம் வசூலிக்கின்றனர். அப்படி செய்தால்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது. 

மிகவும் கஷ்டப்பட்டு படித்துதான் நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு மாணவர்கள் படிக்க வேண்டுமா? ஒரு மாணவர், தினமும் 15 மணி நேரம் படிப்பதாகச் சொல்கிறார். 15 மணி நேரம் படித்துதான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? 

1970ல் ஆரம்பிக்கப்பட்ட செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி இன்றும் தரமாக இருக்கிறது. இந்தியாவில் முதல் 5 இடங்களில் உள்ளது. அவர்களெல்லாம் எந்த நீட் தேர்வுக்குப் படித்தார்கள்? 

என் மகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற 100 பேரை வைத்துப் பேசுகிறார்கள். ஆனால் இந்த பயிற்சிக்கு பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் என்று கேளுங்கள். 

அரசுப்பள்ளியில் படித்த 650 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக ஆளுநர் கூறுகிறார். அவர்கள் எதனால் சேர்ந்தார்கள்? தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீடு கிடைத்ததனால்தான் சேர்ந்திருக்கிறார்கள். நீட் தேர்வினால் சேரவில்லை, நீட் பயிற்சி மையத்திற்கு செல்லாமல் தேர்ச்சி பெற்றது 100ல் ஒரு மாணவர் வேண்டுமானால் இருக்கலாம். 

நீட் தேர்வு பயிற்சிக்காக என் மகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் என 4 ஆண்டுகளுக்கு 20 லட்சம் செலவு செய்திருக்கிறேன். மத்திய அரசு பணியாளர் என்பதால் நான் செலவு செய்துவிட்டேன். மற்ற பெற்றோர்கள் செய்யமுடியுமா? 

இந்த ஆதங்கம் அனைத்து பெற்றோர்களிடமும் இருக்கிறது. இதற்கு முன்னால் ஆளுநரிடம் என்னால் நேரடியாக இதனை கேட்க முடியவில்லை. இப்போது தேர்வில் என் மகள் வெற்றி பெற்றதினால் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து இன்று கேள்வி கேட்டேன். ஆனால், ஆளுநர் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்' என்று பேசினார். 

மாணவியின் தந்தை சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி. இவர் சேலம் உருக்காலையில் பணிபுரிகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com