நாட்டுடைமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத்தொகை: முதல்வர் வழங்கினார்

பேராசிரியா் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டத்தையடுத்து அதற்கான உரிமைத்தொகையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 
நாட்டுடைமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத்தொகை: முதல்வர் வழங்கினார்

பேராசிரியா் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டத்தையடுத்து அதற்கான உரிமைத்தொகையினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

தமிழில் 100க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதிய பேராசிரியர் முனைவர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று கடந்த மாதம் நடைபெற்ற நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

இதையடுத்து நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான தொகை ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவரது துணைவியாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) வழங்கினார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை 173 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 

முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுநாள்வரை சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு, பேராசிரியர் க. அன்பழகன், முனைவர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்,  நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது,  நெல்லை  கண்ணன், கந்தர்வன் என்கிற நாகலிங்கம், சோமலே, முனைவர் ந. இராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகிய 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, முதல்வர் 30.07.2023 அன்று சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில், நன்னன் அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கின்ற காரணத்தால், அந்தப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன், தமிழ்நாடு அரசு சார்பில் நன்னனுக்கு புகழ் சேர்கிற வகையில் நன்னன் அவர்களின் புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்னனின் குடும்பத்தினரோ, உறவினர்களோ, வேறு யாரும் கோரிக்கைகளை இந்த நேரத்தில் வைக்கவில்லை.  யாரும் வைக்காமல் இந்த கோரிக்கையை நான் அறிவிக்கிறேன் என்று சொன்னால், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்' என்று தெரிவித்தார்.

அதற்கிணங்க, பேராசிரியர் முனைவர் மா. நன்னன் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள் உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில்  அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவரது துணைவியார் ந. பார்வதி அம்மாளுக்கு நூலுரிமை பரிவுத் தொகையான 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை  செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள், பேராசிரியர் முனைவர் மா. நன்னனின் மகள்கள் வேண்மாள், அவ்வை மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com