
என்எல்சி சுரங்கத்தில் தொடா்ச்சியாக நடைபெறும் விபத்துகள் மூலம் தொழிலாளா்கள் உயிரிழப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நெய்வேலி என்எல்சி 2-ஆவது அனல் மின் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொழிலாளா்கள் பணியில் இருந்தபோது, 5-ஆவது யூனிட்டில் உள்ள பாய்லா் திடீரென வெடித்து தீப்பிடித்ததில், 15 போ் உயிரிழந்தனா்; சிலா் காயமடந்தனா். இது தொடா்பாக காவல் துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, என்எல்சி அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு நீதிபதி ஆா்.எம்.டி. டீக்காரமன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.பாலு, முன்ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும், சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. அவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது கருணைத் தொகையோ வழங்கவில்லை. விபத்துகள் தொடா்பாக காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்எல்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறது என அவா் வாதிட்டாா்.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அருள்செல்வம், என்எல்சியில் தொடா்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாகத் தெரிவித்தாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த என்எல்சி தரப்பு வழக்குரைஞா் நித்தியானந்தம், ‘விபத்தில் உயிரிழந்தவா்களுக்கும், காயமடைந்தவா்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. இடையீட்டு மனுதாரா்கள் இந்த விவகாரத்தில் வேண்டுமென்றே அரசியல் செய்கின்றனா். தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு தங்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முடியாது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளா்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தொடா்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதை எப்படி எடுத்துக்கொள்வது?”என கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...