

வேலூா், திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி: வேலூா் மாவட்டம் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
கோ-ஆப்டெக்ஸ் கட்டடங்கள்: நெசவாளா்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த உதவும் வகையில், திருநெல்வேலியில் 9,320 சதுர அடி பரப்பில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகமும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 1,900 சதுர அடி பரப்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையமும் கட்டப்பட்டுள்ளன. அவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
நெசவாளா்களுக்கு வழங்கப்படும் நூலை தரமான முறையில் சாயமிட்டு அளிக்க, மதுரை மாவட்டம் தொட்டியபட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் சாயக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ஆா்.காந்தி, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.