திருவள்ளூருக்கு சிவப்பு எச்சரிக்கை என்றால்.. அது: தமிழ்நாடு வெதர்மேன்

திருவள்ளூருக்கு சிவப்பு எச்சரிக்கை என்றால் அது சென்னைக்கும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: திருவள்ளூருக்கு சிவப்பு எச்சரிக்கை என்றால் அது சென்னைக்கும்தான் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 3ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்றும், டிசம்பர் 5ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயலாக கரையைக் கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்திலிருந்து இன்று மதியம் வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, டிசம்பர் 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்பதார்ல சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு டிசம்பர் 4ஆம் தேதி அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எதிர்பார்த்த சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூரையும் சென்னையையும் பிரித்துப் பார்க்க முடியாது. திருவள்ளூரில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டால் அது சென்னைக்கும் பொருந்தும். அப்போதெல்லாம் திருவள்ளூரைக் காட்டிலும் சென்னைக்கு அதிக மழை பெய்யும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில், தென்கிழக்கிலிருந்து எஸ் வடிவில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து வந்த மூன்று புயல்கள் உள்ளன. அதில், ஓக்னி 2006ஆம் ஆண்டும், 2020ஆம் ஆண்டு நிவர் புயலும், அதிகம் பேசப்பட்ட புயலாக 2008ஆம் ஆண்டு நிஷா புயலும் அடங்கும். இந்தப் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும், இவை பொழிந்த மழையால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு நேர்மாறாக மழையைக் காட்டிலும் காற்றின் வேகம் அதிகரித்து பாதிப்பை அதிகம் ஏற்படுத்திய புயல்கள் வர்தா, தானே, கஜா போன்றவைதான் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com