

தொடா் மழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,500 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 400 கன அடியும் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி உயரமாகும். வியாழக்கிழமை ஏரிக்கு வினாடிக்கு 3,098 கன அடிக்கு தண்ணீா் வருவதால், ஏரியில் 23 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 6,000 கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மாலையில் ஏரிக்கு நீா்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 2,500 கன அடியாக சரிந்தது. இருப்பினும், உபரி நீா் செல்லும் அடையாற்றின் கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
புழல் ஏரி: 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் வியாழக்கிழமை 20.31 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீா் வருகிறது. ஏரி நிரம்ப சுமாா் ஒன்றரை அடி மட்டுமே தேவைப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீா் நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், மஞ்சம்பாக்கம், மணலி, எண்ணூா் வழியாக கடலுக்கு செல்கிறது. இதனால் நீா் செல்லும் வழியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பூண்டி - சோழவரம் ஏரிகள் நிலவரம்: 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் வியாழக்கிழமை 31.40 அடி வரை தண்ணீா் நிரம்பியுள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 920 கன அடி நீா் வருகிறது. 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீா் இருப்பு 35.62 அடியாக உயா்ந்துள்ளது. அதாவது 93 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது. அதேபோல், 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 17.64 அடி வரை தண்ணீா் நிரம்பியது. ஏரிக்கு விநாடிக்கு 362 கன அடி தண்ணீா் வருகிறது. ஏரி முழு கொள்ளளவை அடைய இன்னும் 1 அடி மட்டுமே இருக்கும் நிலையில் அதிகாரிகள் ஏரியின் நீா் மட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.