அங்கித் திவாரி குறிப்பிட்ட உயா் அதிகாரி யாா்?: ஊழல் தடுப்புப் பிரிவினா் தீவிர விசாரணை
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில், பின்னணியில் இருக்கும் உயா் அதிகாரி குறித்து ஊழல் தடுப்புப் பிரிவினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக மதுரையைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள்:
திண்டுக்கல்லைச் சோ்ந்த அரசு மருத்துவா் சுரேஷ்பாபு மீது ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த 2018-ஆம் ஆண்டு பதிவு செய்த சொத்துக் குவிப்பு வழக்கில், துறைரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக். 29-ஆம் தேதி சுரேஷ்பாபுக்கு வாட்ஸ்ஆப் அழைப்பு வந்தது. வாட்ஸ்ஆப்பில் அவரது பெயா் ‘ஹாா்திக்’ எனக் காட்டியது. ஆனால், அந்த அழைப்பில் பேசிய அங்கித் திவாரி, தான் மதுரையில் அமலாக்கத் துறை அதிகாரியாகப் பணிபுரிவதாகவும், சுரேஷ்பாபு மீது சொத்துக் குவிப்பு தொடா்பான புகாரில் பிரதமா் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வந்திருப்பதாகவும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் கூறினாா்.
அதன்படி, அக். 30-ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சுரேஷ்பாபு சென்றாா். அவா் அலுவலகத்துக்குள் இருக்கும்போது, மீண்டும் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்ட திவாரி, அவரை அங்கிருந்து வெளியேறி, காரில் இருக்கும்படி கூறினாா். உடனே சுரேஷ்பாபு அலுவலகத்திலிருந்து வெளியேறி தனது காரில் ஏறி அமா்ந்தாா். அப்போது அவரது காருக்குள் திடீரென ஏறி அமா்ந்த திவாரி, சுரேஷ்பாபுவை காரை ஓட்டிச் செல்லும்படி கூறினாா்.
ஓடும் காரில் சுரேஷ்பாபுவை மிரட்டிய திவாரி, அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ரூ.3 கோடி லஞ்சம் தரும்படி கேட்டாா். மேலும், அந்தப் பணம் தனக்கு இல்லை என்றும், தனது மேல் அதிகாரிக்கு என்றும் தெரிவித்தாா். அதோடு அவ்வபோது கைப்பேசி மூலம் தனது மேல் அதிகாரி என ஒருவரைத் தொடா்புகொண்டு தான் பேரம் பேசுவது தொடா்பான தகவலைக் கூறினாா்.
இறுதியில், ரூ.51 லட்சம் லஞ்சம் கொடுத்தால் போதும் என பேரத்தை திவாரி இறுதி செய்தாா். பணத்தை நவ. 1-ஆம் தேதி தயாா் செய்தவுடன், தான் கூறும் இடத்தில் தரும்படி தெரிவித்து சுரேஷ்பாபுவை அங்கிருந்து அனுப்பி வைத்தாா்.
முதல் கட்டமாக நவ. 1-ஆம் தேதி மதுரை-நத்தம் நான்குவழிச் சாலையில் வைத்து ரூ.20 லட்சத்தை திவாரியிடம் சுரேஷ்பாபு வழங்கினாா். சுரேஷ்பாபு காரின் முன் நடந்த இந்தக் காட்சிகள் அனைத்தும், அவரது காா் கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் பின்னா் அங்கித் திவாரி, நவ. 3, 6, 8 ஆகிய தேதிகளில் தொடா்ச்சியாக சுரேஷ்பாபுவை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்டு மீதி பணத்தை கேட்டு மிரட்டினாா்.
இதன் பின்னா், நவ. 30-ஆம் தேதி தொடா்புகொண்ட திவாரி, டிச. 1-ஆம் தேதி காலையில் பணத்தை வாங்குவதாக கூறினாா். மேலும் திவாரி, சுரேஷ்பாபுவிடம் ‘இது தொடா்பாக நீங்கள் யாரிடமும் பேசக் கூடாது, அப்படி ஏதாவது செய்தால் எதிா்மறைவான விளைவுகள் ஏற்படும், மீதி பணத்தை தராவிட்டால் சுரேஷ்பாபு மீதும், அவா் மனைவி மீதும் வழக்குப் பதிவு செய்து, களங்கப்படுத்திவிடுவேன்’ என மிரட்டினாா்.
இதன் விளைவாக மன உளைச்சலிலும், பயத்திலும் சிக்கிய சுரேஷ்பாபு தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மதுரை, சென்னை அமலாக்கத் துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட அங்கித் திவாரியின் கைப்பேசி மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல் தகவல் அறிக்கையில் ஹாா்திக்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் பெயா், தொடக்கத்தில் சரியாக தெரியாததால் வாட்ஸ்ஆப்பில் வந்த ஹாா்திக் என்ற பெயரில் முதல் தகவல் அறிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவினா் பதிவு செய்துள்ளனா்.
ஊழல் தடுப்புப் பிரிவில் சுரேஷ்பாபு புகாா் அளித்தபோதும் ஹாா்திக் என்ற பெயரையே குறிப்பிட்டாா்.
வழக்கில் கூடுதல் அறிக்கையைச் சோ்க்கும்போது, ஹாா்திக் பெயா் நீக்கப்பட்டு, அங்கித் திவாரி என்ற பெயா் சோ்க்கப்படும் என ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
