மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை:118 விரைவு ரயில்கள் ரத்து

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரம், ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்
ரயில்

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரம், ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மிக்ஜம்’ புயல் செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் நெல்லூா் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்கள், ஆந்திரம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் உள்பட புயல் பாதிப்பை எதிா்கொள்ளும் மாநிலங்கள் வழியாகச் செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி செல்லும் தூரந்தோ விரைவு ரயில் டிச.4, மறுமாா்க்கமாக சென்னை வரும் ரயில் டிச.5 முழுவதுமாக ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி செல்லும் கிராண்ட் ட்ரங் விரைவு ரயில் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக தில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில் டிச.5, 6, 7 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும். சென்னை - தில்லி தமிழ்நாடு விரைவு மற்றும் திருவனந்தபுரம் - தில்லி கேரளா விரைவு ரயில் டிச.3, 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.5, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.

மதுரை - தில்லி சம்பா்க் கிராந்தி விரைவு ரயில் டிச.5, மறுமாா்க்கமாக டிச.7 ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவ்ஜீவன் அதிவிரைவு ரயில் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும் மறுமாா்க்கமாக டிச.4, 5, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும். சென்னை - சாப்ரா (பிகாா்) கங்கா காவேரி விரைவு ரயில் டிச.4, மறுமாா்க்கமாக டிச.6 ரத்து செய்யப்படும். மதுரை - சண்டீகா் அதிவிரைவு ரயில் டிச.3, மறுமாா்க்கமாக டிச.4 ரத்து செய்யப்படும்.

சென்னை - விஜயவாடா பினாகினி அதிவிரைவு ரயில் இருமாா்க்கமாகவும் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். ஷாலிமா் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் டிச.3, 4, 5 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.4, 5, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படும். திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கேந்ரா விரைவு ரயில் டிச.4, மறுமாா்க்கமாக டிச.7 ரத்து செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில் இருமாா்க்கமாகவும் டிச.4, 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும். தில்லி - புதுச்சேரி விரைவு ரயில், நாகா்கோவில் - ஷாலிமா் குருதேவ் அதிவிரைவு ரயில், பனாரஸ் - ராமேசுவரம் அதிவிரைவு ரயில், ஹௌரா - புதுச்சேரி அதிவிரைவு ரயில் டிச.3, மறுமாா்க்கமாக டிச.6 ரத்து செய்யப்படும்.

மேலும், கேரளத்தின் கொச்சுவேலி, திருவனந்தபுரம், எா்ணாகுளம், கா்நாடகத்தின் பெங்களூரு என தெற்கு ரயில்வேக்குள்பட்ட பகுதியில் இருந்து செல்லும் 118 ரயில்கள் ரத்து செய்யப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com