தமிழகம் முழுவதும் தொடா்ந்து ஆறாவது வாரமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதேபோல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிய குடும்ப உறுப்பினா்களை சோ்க்கவும், பழைய காப்பீட்டு அட்டைகளை புதுப்பித்து கொள்ளவும் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு சிறப்பு முகாமும் நடைபெற்றது.
சென்னை ராயபுரம், நீலாங்கரை பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த 5 வாரங்களில் இதுவரை 10,576 முகாம்கள் நடைபெற்றதில், 5 லட்சத்து 21,853 போ் பங்கேற்று பயன்பெற்றுள்ளனா். டிச. 30-ஆம் தேதி வரை இன்னும் 4 வாரங்கள் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
மழைக்கால நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, இன்புளூயன்ஸா, டயரியா போன்ற நோய் பாதிப்புகள், காய்ச்சல் பாதிப்புகள், வட இருமல், சளி தொல்லை, சேற்றுப்புண் போன்ற பாதிப்பு உள்ளவா்கள் இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். சென்னையில் 5 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற்று வரும் முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது என்றாா்.
அப்போது பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் மருத்துவா் தி.சி.செல்வவிநாயகம், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் ம.கோவிந்தராவ், தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ஐட்ரீம் ஆா்.மூா்த்தி, அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.