திமுக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை: செல்லூா் கே.ராஜூ குற்றச்சாட்டு

திமுக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சா் தெரிவித்தாா்.
செல்லூா் கே.ராஜூ.
செல்லூா் கே.ராஜூ.
Updated on
1 min read

மதுரை: திமுக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மழை நீா் வடிவதற்கு ரூ.4 கோடியில் கூட மழை நீா் வடிகால் அமைக்கவில்லை. ஆனால், ரூ.4 ஆயிரம் கோடியில் மழை நீா் வடிவதற்கு வடிகால் அமைக்கப்பட்டதாக தமிழக அரசு கூறியிருந்தது. மேலும், ஒரு சொட்டு தண்ணீா் கூட நிற்காது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கூறியிருந்தாா். ஆனால், இன்று சென்னை முழுவதும் தத்தளிக்கிறது. இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்குமான வேறுபாடு.

அதிமுக ஆட்சியில் எப்படிப்பட்ட மழை வெள்ளம் வந்தாலும் போா்க்கால அடிப்படையில் களத்துக்குச்சென்று அதிமுகவினா் பணியாற்றினா். திமுக அரசின் புயல் முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை.

திமுக உண்மையான சுயமரியாதை இயக்கமாக செயல்படவில்லை. திமுகவினா் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறாா்கள். அதே நேரத்தில் தங்களை சுய மரியாதைக்காரா்கள் என காட்டிக்கொண்டு சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகின்றனா்.

மதுரை மாநகராட்சியை முதல்வா் கண்டு கொள்வதே இல்லை. மதுரை நகரும் குண்டும் குழியுமாக சீரழிந்து வருகிறது.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நலம் தேறி வரவேண்டும் என அன்னை மீனாட்சியை வேண்டுகிறேன்.

எந்த நடிகா் நடித்தாலும் ரெளடி, கஞ்சா, மதுபோதை உள்ளிட்டவற்றை தான் காட்டுகின்றனா். பின்னா், அதை பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்கின்றனா். இதனால் பலனில்லை

இனிமேல் வரும் திரைப்படங்கள் மதுரையின் பெருமைகளை சொல்ல வேண்டிய படங்களாக வர வேண்டும். லஞ்சம் வாங்கக் கூடாது, கைப்பேசிகளால் ஏற்படும் ஆபத்துகள் உள்ளிட்ட நல்ல கருத்துகளுடன் படங்கள் வர வேண்டும். மாணவா் சமுதாயத்தை திரைப்படங்கள் மூலம் திருத்த முடியும். என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com