
சென்னை: ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழகத்திற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.