எல்லோருக்கும் இதய தெய்வம் எம்ஜிஆர்! எனக்கோ துர்கா ஸ்டாலின்தான்!! - வைரலான இந்துமதியின் பதிவு

சென்னையில் மழை வெள்ளத்தில் வீட்டில் சிக்கிக்கொண்டது குறித்து முகநூலில் எழுதிய  தன்னுடைய பதிவு வைரலாகிய நிலையில் திடீரென நீக்கிவிட்டார் எழுத்தாளர் இந்துமதி.
எழுத்தாளர் இந்துமதி | அவரது தெருவில் தேங்கியிருக்கும் வெள்ள நீர்.
எழுத்தாளர் இந்துமதி | அவரது தெருவில் தேங்கியிருக்கும் வெள்ள நீர்.

சென்னையில் மழை வெள்ளத்தில் வீட்டில் சிக்கிக்கொண்டது பற்றி முகநூலில் எழுதிய  தன்னுடைய பதிவு வைரலான நிலையில் திடீரென அதை நீக்கிவிட்டார்  எழுத்தாளர் இந்துமதி.

வெள்ளத்தில் சிக்கியது குறித்தும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மனைவி துர்கா ஸ்டாலின் உதவியுடன் அங்கிருந்து வெளியேறியது  குறித்தும் பதிவு ஒன்றை எழுதியிருந்தார் எழுத்தாளர் இந்துமதி.

அவரது முகநூல் பதிவு: 

"இது எங்கள் தெருவின் அவல நிலை.. இடுப்பு வரை கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம். எந்த ஒரு வாகனமும் வரவே இயலாது.

நடந்துவந்தால் இடுப்புக்கு மேல் வரை கழிவுநீரில்தான் நடக்க வேண்டும். இத்தனைக்கும் அதற்கு வி.வி.ஐ.பி.க்களின் தெரு என்கின்ற பெயர் வேறு. தெருக் கோடியில் சிம்சன் கம்பெனி அனந்தராம கிருஷ்ணன், சிவசைலத்தின் வீடு. தற்போது சுந்தரம் மோட்டார் நிறுவனமும் சம்பந்திகளானதால் அந்தப் பேரு வேறு. எங்கள் ராதாகிருஷ்ணன் தெருவே மிக மிகப் பிரபலமானவர்கள் வசித்த இடம். இந்தக் கோடியில் எஸ் எஸ் வாசன், அந்தக் கோடியில் டாக்டர் ராதாகிருஷ்ணன், எதிர்புறம் டாக்டர் ஈ.வி.கல்யாணி நர்ஸிங் ஹோம், பழம்பெரும் பள்ளியான சில்ரன்ஸ் கார்டன் ஸ்கூல், லலிதா பத்மினி ராகினி வீடு, இடப்புறம் வந்தால் பாரம்பரியமான உட்லண்ட்ஸ் ஓட்டல் என சீரும் சிறப்புமாக இருந்த பெரும் சாலை. டாக்டர் அகல்வால் கண் மருத்துவமனைகூட முதல் முதலில் அங்குதான் இருந்தது.

அப்பேற்பட்ட சாலையின் குறுக்கே உட்லண்ட்ஸ் ஓட்டல் தாண்டி சிக்னலுக்கு இடப்புறம் திரும்பினால் எங்கள் இல்லம் இருக்கும் சிவசாமி சாலை. பெரிய பெரிய பங்களாக்களைக் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடங்களே இல்லாத அகன்ற அமைதியான சாலை. சிம்ப்சன் கம்பெனி வீட்டு மரங்கள் தெரு முழுதும் விரிந்து பந்தல் போட்ட மாதிரி நிழல் தந்ததோடு மட்டுமே அல்லாமல் சாலையே தெரியாத அளவுக்கு அவை விரித்திருந்த வெள்ளைப்பூ கம்பளங்களுக்கு ஆசைப் பட்டே அந்த வீட்டை வாங்கினேன். உட்லண்ட்ஸ் கிருஷ்ணா ராவும், மம்மி டாடி துணிக்கடை முதலாளிகளான முகமதியர்கள் என பெரும் தலைகள் வாங்க ஆசைப்பட்ட வீடு. அவர்கள் சொன்ன தொகை வேறு என் அப்பாவும், கணவரும் சேர்ந்து கூறிய தொகை வேறு. வீட்டின் உரிமையாளரான மாத்துவப் பெரியவர் என்னை அருகில் அழைத்து " அம்மா இந்த வீட்டை உனக்குத் தரணும் னுதான் நான் ஆசைப்படறேன்.ஆனால் உங்கப்பாவும் வீட்டுக் காரரும் வெறும் இருபத்தையாயிரம் ரூபாயில் தயங்கி நிற்கிறார்கள்.." என்று வருத்தப் பட்டார். நான் ஒரு முடிவோடு வீடு திரும்பினேன்.

மிகவும் பெயரும் புகழும் சம்பாத்தியமுமாக உயர்ந்திருந்த காலகட்டம் அது. ஆகவே மறுநாளே முப்பதாயிர ரூபாயை அப்பெரியவரிடம் கொண்டு போய்க் கொடுத்து "மாமா, இதோ அவர்கள் தயங்கியதற்கு மேல் ஐயாயிரம். உங்கள் தெருவின் அழகிற்காக, சிம்சன் கம்பெனி மரங்கள் விரித்திருந்த பூக்கம்பளத்திற்காகவே இத்தெருவிற்கு வர ஆசைப் படுகிறேன். இப்பணத்தைக் கொடுத்தது யாருக்கும் தெரிய வேண்டாம். அவர்களிடம் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விடுங்கள்" என கூறி தெருவின் அழகிற்காக, நிழலுக்காக, பூக்களின் விரிப்பிற்காக வாங்கிய வீடு...

இன்று அந்தத் தெருதான் சாக்கடையாக மாறி இருக்கிறது..45 நிமிடங்களில் 47 செ.மீ மழை பெய்தால் யார் தான் என்ன செய்ய முடியும்? இது வரலாறு காணாத மழை தான். இது வரை பெய்யாத மழைதான். 2015 க்குப் பிறகு இயற்கையின் சீற்றம். யாரும் இப் பெரும் மழையை எதிர்பார்க்கவில்லைதான்.

கழிவுநீர் ஆறாக மாறியது தெரு. எல்லாக் கழிவுகளும் அடித்துக் கொண்டு வந்து எங்கள் வீட்டின் காம்பவுண்டிற்குள் குவித்திருந்தது தெரு வோரத்தில் அவரவர்களின் கார்களை நிறுத்த வைக்கப் பட்டிருந்த பேரிகேடிலிருந்து அடித்துக் கொண்டு வந்து எங்கள் காம்பவுண்ட் வாசலில் கரை கட்டியிருந்தது. இவர்களுக்கு பேரிகேட் கொடுத்தது யார் என்றே தெரியவில்லை. பேரிகேட்கள் இதற்காகவா இருக்கின்றன? ) எல்லார் வீட்டு வாசலிலும் போடப் பட்டிருந்த குப்பைப் பைகளும் என் வீட்டு வாசலிலேயே.. .. வாசல் மட்டும் இல்லாமல் உள்ளே குபுகுபு வென்று புகுந்து அனைத்து அறைகளிலும் கணுக்கால் அளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது.

வயதான என் கணவரைப் படியேற்றி மிகவும் அவசியமான பொருட்களோடு மட்டும் மாடிக்குச் சென்று விட்டோம்.

அந்த நாள் ராத்திரி சற்று அமைதியாகத்தான் போயிற்று. மறு நாளான இன்று பகல் பிரச்சினை ஆரம்பமாயிற்று.

முதல் நாள் பகல், இரவு என்று ஓடிய இன்வெர்டர் முடியப்போகிறேன் என்று பயமுறுத்தியது.ஏற்கெனவே இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாததால் ஓவர்ஹெட் தண்ணீரும் தீர்ந்து போகிற நிலை. ஏற்கனவே அக்கம் பக்கம் வீடுகளில் இன்வெர்டர் தீர்ந்து இருள் சூழ்ந்திருந்தது. எங்களுக்கு மாடியில் சமைக்கிற வசதி குறைவு. அக்வா கார்டில் குடிநீர் இல்லை. யாராலும் எதுவும் வாங்கித் தர இயலாது. அந்த நிலையில் இடுப்புக்கு மேல் வரை கழிவுநீர் ஓடினால் யாரால் என்ன முடியும்?

முதலில் அமைச்சர் மா.சுப்ரமணியத்திற்குதான் போன் செய்தேன்.நான் களத்தில் தான் இருக்கிறேன் எல்லா இடங்களும் அப்படித்தான் இருக்கின்றன.. நாலைந்து மணி நேரம் போனால் நீர் குறைந்து விடும் " என்று நம்பிக்கையூட்டினார். நீர் ஏறிக் கொண்டே போயிற்றே தவிர குறையவில்லை. குடிநீரோ, பாத்ரூம் போனால் தண்ணீரோ இல்லாவிட்டால் என்ன செய்வது. தெருவில் ஓடும் தண்ணீர் குறையாவிடில் எவ்வாறு மின்சாரம் தருவார்கள்? ஆனாலும் அற்ப ஆசை. தங்கம் தென்னரசுவிடம் கேட்டேன். உங்கள் தெருவில் நீர் மட்டம் குறையட்டும். மின்சாரம் கொடுக்கப்படும் என்றார். மழையான மழை. 

ஆபத்பாந்தவி அனாதரட்சகி எனக்கு துர்கா ஸ்டாலின் தான். அவரிடம் சாப்பிடவோ, குடிநீரோ இல்லாததைச் சொன்னேன்.

"இருங்க. முதலில் சாப்பாடுக்கும் தண்ணீருக்கும் ஏற்பாடு பண்ணுகிறேன்" என்றார். அடுத்த வினாடி சிற்றரசு போன் பண்ணினார்.

அம்மா வெஜ்ஜா, நான்வெஜ்ஜா என்று கேட்டார்.

"ப்யூர் வெஜிடேரியன்ங்க ". என்றேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் தலையில் ஒரு பெரிய பையில் நான்கு பேருக்குமான சாப்பாடும் பத்து அக்வா ஃ பினா பாட்டில்களையும் தலைமீது சுமந்து கொண்டு ஒருவர் கொட்டுகின்ற மழையில் ரெயின் கோட்டோடு வந்து கொடுத்த போது என் மனம் மிகவும் வேதனையும் சங்கடமும் பட்டது. இவர்களெல்லாம் இப்படி கஷ்டப் படுகிறார்களே, படுத்துகிறோமே.." என்று வலித்தது.

அவரிடம் தயைகூர்ந்து போய் சாக்கடைத் தீவில் மாட்டிக் கொண்டுள்ள எங்கள் நிலைமையை சொல்லுங்கள் என்றேன்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சிற்றரசு லைனில் வந்தார்.

அம்மா உங்க நிலைமை புரியுது. சாப்பாடு , தண்ணீர் எல்லாம் அரேன்ஜ் பண்றோமா " என்றார்

"சார், சாப்பாடு, குடி தண்ணீர் கொடுத்துடுவீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துக்குத் தான் இன்வெர்டர் வேலை செய்யும்.கரண்ட் இல்லாததால மோட்டர் போட முடியாது. ரெஸ்ட் ரூம் போகக் கூட தண்ணீர் இருக்காது.‌ நாங்க என்ன செய்ய?" என்று கேட்டேன்

"உங்க வீட்டு தெருக்கொடியில ராதாகிருஷ்ணன் சாலை ஆக்ஸிஸ் பாங்க் முனைல ராட்சஸ பம்ப் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணியை வெளியேத்திக்கிட்டிருக்காங்கம்மா.." என்றார்

"சார் நீங்க இப்படி சொல்றீங்க. கார்பரேஷன் அதிகாரி உங்க தெருவில் இருக்கிறது நூறு லாரிக்கு மேலான தண்ணீர்.எவ்வளவுதான் இறைச்சாலும் போக வழி இல்ல. உங்க ரோடு பள்ளமானதால் திரும்ப தண்ணி உங்க ரோடுக்கே வருது.."

எனக்கு பகீர் என்றது.

"சார். அப்ப எங்களுக்கு என்னதான் வழி?"

" வேற வழி இல்லம்மா.. தண்ணீர் தானாகத்தான் வடியணும் "

கடவளே! அவ்வளவு தண்ணீரும் எப்போது வடிவது? நமக்கு விடிவு காலம் பிறப்பது?

உத்திர காசியில் மாட்டிக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்களின் ஞாபகம் வந்தது. எனக்கு அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது. அதுவும் உடல் நலம் குன்றிய வயதான கணவரை வைத்துக் கொண்டு போராட முடியாது. இயற்கை உபாதைகளை அடக்க முடியாது.. என்ன செய்வது?

மீண்டும் சிற்றரசுவை அழைத்து நிலைமையைச் சொல்லிக் கேட்டேன்.

"அதாம்மா நிலைமை "என்றார்.

"அப்ப எனக்கு ஒரு உதவி செய்ங்க. கார் ஏற்பாடு செய்து எங்களை இந்தத் தீவிலிருந்து வெளியில் கொண்டு போய் விட்டுடுங்க உங்களுக்குப் புண்ணியமாப் போகும் "

" சாதா கார் எல்லாம் இந்தத் தண்ணில வராதும்மா..ஜீப்தான் ஏற்பாடு பண்ணனும். பண்ணிவிட்டுச் சொல்றேன்."

எனக்கு உயிர் வந்தது போலிருந்தது. மடமடவென்று என் மருமகளும் நானுமாகப் பேக் பண்ண ஆரம்பித்தோம். அனைவரும் ஒரே இடத்தில் ஜீப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம் அப்போது பகல் 2 மணி.5 -5-30 வரை காத்திருத்தல்.வெளியே இருள் சூழ்ந்ததைப் பார்த்து பயம் வந்தது.

மீண்டும் சிற்றரசுவிற்கு போன் செய்தபோது, "சாரிம்மா. ஜீப் கூட உங்க தெருவுல வர முடியல.. ராத்திரி சாப்பாடும் தண்ணியும் அனுப்பறேன்.காலையில் சற்று நீர் வடியும் பார்க்கலாம்."

"அதுக்குள்ள இன்வெர்டர் நின்னுடும் ‌ஏற்கெனவே தெரு முழுசும் யார் வீட்ல்யும் விளக்கில்ல. கும் இருட்டா இருக்கு."

எமர்ஜென்சி லைட் இரண்டு வாங்கி அனுப்பறேன் ராத்திரி சமாளிச்சுக்குங்க.காலையில் பார்த்துக்கலாம் "

ராத்திரி சமாளிப்பதா?!?

அதற்குள் துர்கா கூப்பிட்டார்கள்.

"ஏங்க ஜீப் வரமுடியலையாங்க.பாதியில் திரும்பிடுச்சாம். ."

" கரண்ட் இருக்கா.. தண்ணி குறைஞ்சிடுச்சா?"

" இல்லீங்க. தண்ணீர், கரண்ட் ரெண்டுமே இல்ல. ஒரு பெரிய வண்டில என்னைக் கொண்டு போய் உட்லண்ட்ஸ் ஓட்டல்ல விட்டுட்டாப் போறுங்க.."

" இருங்க. பேசிட்டு வரேன்."

அடுத்த ஐந்தாவது நிமிடம்

சிற்றரரசு பேசினார்.

ரெடியா இருங்க.எப்படியாச்சும் ஜீப் கொண்டு வந்து உங்களை உட்லண்ட்ஸ்ல விட்டுடறோம்.

எனக்கு உயிர் வந்தது. ஆனாலும் வெளியில் கும்மிருட்டு. பக்கத்து டாக்டர் ஸ்ரீராம் வீட்டு ஜெனரேட்டர் ஓடவில்லை.அந்த இருட்டில் போராடிக் கொண்டிருந்தார்கள்.

மம்மி டாடி துணிக்கடை வீட்டு ஸோலார் உபயத்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று ஒரு பெரிய சர்ச் லைட் போட்டிருந்தார்கள்.

ஜீப் வந்தது. கூடவே மெட்ரோ வாட்டர் உயரதிகாரி.

இரண்டு உதவியாட்கள். மெல்ல ஸர்ச் விளக்கின் உபயத்தால் கணவரை நானும் உதவியாளர் ஒருவருமாகப் படியிறக்கினோம். சாமான்களைக் கொண்டு வந்து அவர்களே ஜீப்பில் ஏற்றினார்கள். நாங்கள் நாலு பேர் + உதவியாளர் இருவர்+ மேலதிகாரி+ஓட்டுனர்.

இத்தனை பாரம் தாங்குமா.பாதியில் நின்று போனால்..?

"இல்லீங்க போயிரலாம்.."

வண்டியை அந்த அளவிற்கு ரெய்ஸ் பண்ணி ஓட்டினார்.பாதித் தெருவிற்கு மேல் ஜீப் கதவுகளின் கண்ணாடியளவு தண்ணீர். தெருக் கோடியில் மனிதனை மூழ்கடிக்கிற நீர்.

ராட்சஸ இயந்திரம் நீர் இறைத்துக் கொண்டிருந்தது. ரெய்ஸ் பண்ணிய லெவலிலேயே ஜீப் ஓடிற்று..நேராகப் போக முடியாது. ஆக்ஸிஸ் பேங்க் உள்ளே நுழைந்து மெயின் ரோடு வந்த பிறகே நம்பிக்கை மூச்சு வெளிப்பட்டது. உட்லண்ட்ஸ் வாசலில் இறங்கி ரிஸப்ஷனில் விசாரித்தால் ஒரு அடியில் இருக்கிற உங்க தெரு நிலைமை தான் இங்கும். ஜெனரேட்டரில்தான் ஓடுகிறது.ஏ.ஸி.கிடையாது. கீஸர் கிடையாது. வை ஃபை கிடையாது.

தண்ணீர் இருக்கும் இல்ல?

இருக்கும்.

விளக்கு போகாதில்ல?

போகாது.

காபி சாப்பாடு கிடைக்குமில்ல?

கிடைக்கும்.

அது போதும் எங்களுக்கு.

லிஃப்ட் ஒர்க் பண்ணாததால் கீழேயே ரூம் தந்திருக்கோம்..

நன்றி.

வந்தவர்களுக்கு நன்றி கூறினேன்

இவை சாத்தியமானது துர்காவினால் .

தில்லானா மோகனாம்பாளில் ஜில்ஜில் ரமாமணி மோகனாம்பாளிடம் ஒரு டயலாக் சொல்வார்.

"அன்னிக்கும் நாதான் உதவினேன். இதோ இன்னிக்கும் நாதான் ஒதவுறேன்"

அந்த வசனம் ஞாபகத்திற்கு வந்தது.

திருவண்ணாமலையில் கொரோனா வந்து குடும்பத்தோடு படுத்துக் கொண்டிருந்த போது உதவியதும் அவர்தான்.

கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான்.

இப்போது இந்த மழைக்கு "போட் வைத்து அழைத்துப் போகிறோம்" என்றவர்களிடம் ஜீப் வைத்து கொண்டு வந்து சேர்ந்ததும் அவர்தான்.

எல்லோருக்கும் இதய தெய்வம் என்றால் எம்.ஜி.ஆர்.தான். எனக்கோ துர்காதான்.!

தெய்வம் மனுஷ்ய ரூபேண.. 

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது...

எந்த ஜென்மத்து பந்தமோ என் மீது அவருக்கும் அவர் மீது எனக்கும் உள்ள அன்பும் நட்பும்!" என்று பதிவிட்டிருந்தார்.

எழுத்தாளர் இந்துமதியின் இந்த பதிவினை நூற்றுக்கணக்கானோர் பகிர்ந்து கொண்டிருந்தனர். மேலும், அவருக்கு ஆதரவாகவும் வாழ்த்துத் தெரிவித்தும் நிறைய கருத்துகள். கூடவே, 'துர்கா ஸ்டாலினைத் தெரிந்திருந்தால்தான் தப்பிக்க முடியும்போல' என்பது போன்ற கிண்டல் செய்தும் கடுமையாக விமர்சித்தும் நிறைய காமென்ட்கள் இடம் பெற்றுக்கொண்டிருந்தன.

_ "உங்கள்துன்பத்தைகூட இவ்வளவு அழகாக எழுத்து உருவில் தருவது உங்களால் மட்டுமே முடியும்.பிரார்திக்கின்றோம்" என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

_ "என்ன செய்வது?. எனக்கு துர்கா ஸ்டாலினைத் தெரியும். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாதே!" மொமேன்ட் மற்ற எல்லாருக்கும்!!" 

"இப்போது நிலைமை கட்டுக்குள் வந்திருக்கும் என நம்புகிறேன். 2007 அல்லது 2008-ல் கைக்குழந்தையான என் மகனை தோளில் சுமந்தபடி இதே கழிவு நீர் முழங்கால் அளவிற்கு மேல் வந்து நிற்க... இரவு முழுவதும் அப்படியே இருந்த ஞாபகம்... பிறகு 2015 ல்.. சாப்பிட எதுவும் கிடைக்காமல் ஒரு நாள் முழுவதும் பட்டினியாக... எல்லோருக்கும் துர்கா ஸ்டாலின் வரமுடியாது, எல்லோராலும் உட்லண்ட்ஸில் தங்க வசதி இருக்காது. இந்த நிலமை சாமானியனை இன்னும் வெகுவாக பாதிக்கும். இராதாகிருஷ்ணன் சாலையே இப்படி ஆனால் குப்பங்கள் நிலைமையை யோசித்தால்...???

ஒரு சென்னைவாசியாக இதை எப்படி எதிகொள்ளபோகிறோம், அதில் நமது பங்கு என்ன? அரசு என்ன செய்யவேண்டும்? நீங்கள் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், பெரிய மனிதர்களின் தொடர்பில் இருப்பவர்.. ஏன் இதைப்பற்றி ஒரு தலையங்கம் எழுதக்கூடாது? நமது பொறுப்பு என்ன, அரசின் கடமை என்ன? இதுபோன்ற இயற்கை பேரிடர்களை தொடர்ந்து சந்திக்கிறோம்...வருங்காலங்களில் தொடர வாய்ப்பு உண்டு... ஆதலால் உங்கள் பார்வையில் இந்த அனுபவத்தை எல்லோர் சார்பிலும் நின்று பார்த்து... ஒரு கதை, அது கஷ்டத்தை மட்டுமின்றி தீர்வையும் பேசுவதாக... நன்றி அம்மா.

(அதிகப்பிரசங்கி தனத்திற்கு மன்னிக்க)"

"துர்கா ஸ்டாலின் தெரிந்ததால் உதவி கிடைத்தது 
தெரியாதவர்களுக்கு..."

இவருடைய பதிவில் நூற்றுக்கணக்கில் காமென்ட்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், திடீரென இன்று  (வியாழக்கிழமை) பிற்பகலில் அந்த பதிவை எழுத்தாளர் இந்துமதி நீக்கிவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com