விரைவு ரயில் சேவை பாதிப்பு: இன்றுமுதல் புறநகா் ரயில்கள் இயங்கும்

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (டிச.7) முதல் புறநகா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில் சேவை பாதிப்பு: இன்றுமுதல் புறநகா் ரயில்கள் இயங்கும்
Updated on
1 min read

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (டிச.7) முதல் புறநகா் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மிக்ஜம்’ புயல் காரணமாக பேசின் பிரிட்ஜ் - வியாசா்பாடி இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை வெள்ளம் சூழ்ந்ததால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயில் மற்றும் புறநகா் ரயில் சேவை முழுவதுவதுமாக பாதிக்கப்பட்டது.

மைசூரு, பெங்களூரில் இருந்து வரும் ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்று அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து பித்ரகுண்டா, மைசூரு, மேட்டுப்பாளையம், மங்களூரு, ஈரோடு, பெங்களூரு, போடிநாயக்கனூா், ஸ்ரீ சாய் நகா் சீரடி செல்லும் ரயில்கள் புதன்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில், காச்சிக்கூடா விரைவு ரயில்கள் பெரம்பூரில் இருந்தும், மும்பை செல்லும் அதிவிரைவு ரயில்கள் திருத்தணியில் இருந்தும், மங்களூரு, அகமதாபாத் செல்லும் ரயில்கள் திருவள்ளூரில் இருந்தும், சேரன் விரைவு ரயில் ஆவடியில் இருந்தும், ஏலகிரி விரைவு ரயில் அரக்கோணத்தில் இருந்தும் புதன்கிழமை புறப்பட்டு சென்றன.

சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் செந்தூா், கொல்லம் விரைவு ரயில்கள் புதன்கிழமை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன. செங்கோட்டை செல்லும் சிலம்பு விரைவு ரயில் எழும்பூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

புறநகா் ரயில் சேவை சீரமைப்பு: வெள்ள பாதிப்பால் புகா்களுக்கு இயக்கப்படும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கடற்கரை, எழும்பூா், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 30 நிமிஷ இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. பேசின் பிரிட்ஜ் பகுதியில் வெள்ள பாதிப்பு குறைந்த நிலையில் சென்னை சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம் வழித்தடத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டன.

தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

சூலூா்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com