திருச்சியில் பயங்கரம்: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பயங்கரம்: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் கொலை

திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரே ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் (45). இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் தொழிற்சங்க நிர்வாகியாக இருந்து நீக்கப்பட்டவர். இந்நிலையில் பிரபாகரன் மீது பல்வேறு வழக்கு இருப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

நேற்று இரவு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, பின்னர் தனது அலுவலகத்தில் பிரபாகரன் அமர்ந்திருந்தார். அப்போது மூன்று நபர்கள் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் புகுந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பிரபாகரனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்துவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில்,திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (38), பஷீர் (29), ரியாஸ் ராஜேஷ் (24) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் பைலட் (28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அப்பு என்கின்ற ஹரிஹரன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நான்கு பேரும் ஆம்புலன்ஸ் உரிமையாளர் பிரபாகரனை கொலை செய்ததாக கூறப்படுகிறது.  இவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நடந்த 13 ஆண்டுகள் ஆகியும், ஒருவரைக் கூட காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இது சிபிசிஐடி, சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. ராமஜெயம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது தொடர்பாக பிரபாகரனிடமும் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சா் கே என். நேருவின் சகோதரா் கே என். ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது. இவ்வழக்கில், திண்டுக்கல்லை சோ்ந்த ரெளடிகள் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் குமாா், திருச்சியைச் சோ்ந்த சாமி ரெளடிகள் ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், ராஜ்குமாா், சிவா, சுரேந்தா், கலைவாணன், கடலூா் சிறையில் இருக்கும் செந்தில்குமாா் உள்ளிட்ட 12 பேரிடம் நீதிமன்ற உத்தரவின்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. 

இந்த உண்மை கண்டறியும் சோதனைக்குப் பிறகு, அதில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மீண்டும் அவா்களிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவினா் முடிவெடுத்து, ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com