ஒரு வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது: முதல்வர் மு.க. ஸ்டாலின் வேதனை!

இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இலங்கைக் கடற்படையினரால் 13-12-2023 அன்று 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (14-12-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், டிச. 13 ஆம் தேதி IND-TN-08-MM-26 என்ற பதிவு எண் கொண்ட இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம் என கவலைபடத் தெரிவித்துள்ளார். 

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும்  ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள முதல்வர், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து, ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கைவசம் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com