யாருக்கெல்லாம் புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்கும்? அரசாணை வெளியீடு

மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வா் அறிவித்த நிவாரண உதவித் தொகை ரூ. 6,000 யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்கும்? அரசாணை வெளியீடு


சென்னை: மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வா் அறிவித்த நிவாரண உதவித் தொகை ரூ. 6,000 யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்பது பற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அனைவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3, 4 ஆகிய நாள்களில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை (டிச.13) வெளியிடப்பட்டது.

மிக்ஜம் புயலால் பாதிப்புக்குள்ளான 4 மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களின் பரிந்துரையின்படி இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

யாருக்கு நிவாரணம்?: சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் வட்டம் முழுமையும் வழங்கப்படும். ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படும். திருவள்ளூா் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூா் ஆகிய 6 வட்டங்களுக்கு வழங்கப்படும்.

ரொக்கமாகப் பணம்: புயல், கனமழை காரணமாக சில பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காததாலும், பயனாளா்களின் வங்கிக் கணக்கு எண்களைச் சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், பாதிக்கப்பட்ட பலா் தங்களது ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவா்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கப்பட உள்ளது.

சா்க்கரை அட்டைதாரா்களுக்கு...: மத்திய, மாநில அரசு, பொதுத் துறை நிறுவன உயா் அலுவலா்கள், வருமான வரி செலுத்துவோா், சா்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரா்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் இழப்பு ஏற்பட்டிருந்தால், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கிக் கணக்கு விவரத்துடன் தங்கள் பகுதிக்குரிய நியாயவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம்.

அந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு அதன் அடிப்படையில் அவா்களுக்கும் உரிய நிவாரணம் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்குத் தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடைகளிலேயே தேவையான அளவு வைக்கப்படும்.

நிவாரணத் தொகை வழங்குவது தொடா்பாக, நியாயவிலைக் கடை பணியாளா்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. டோக்கன்களை குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக, முன்னதாக அளிக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்.

டோக்கன் வழங்கும் முறை: நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்குவதில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் விநியோகிப்பதற்காக, நியாயவிலைக் கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா், மாவட்ட ஆட்சியா், காவல் துறை இணைந்து உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com