வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ. 6,000-ஐ ரொக்கமாக வழங்கலாம் எனவும், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களைச் சோ்ந்த 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 6,000 நிவாரண உதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரொக்கமாக வழங்கப்படும் இந்த நிவாரணத் தொகையை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரா் ராமதாஸ் என்பவரும், நிவாரண தொகையை அதிகரித்து வங்கிக் கணக்கில் வழங்க வேண்டும் என சட்டக் கல்லூரி மாணவா் செல்வகுமாா் என்பவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்கபுா்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில், ரொக்கமாக நிவாரணத்தை வழங்கும்போது முறையானவா்களுக்கு சென்றடையாது. கடந்த 2015-ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட்டது. டோக்கன் முறை மூலம் நிவாரணம் வழங்குவது தவறாகப் பயன்படுத்தக்கூடும். பலா் ஒரு முறைக்கு மேல் நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் சம்பந்தப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த உத்தரவிட வேண்டும்”என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், ஏற்கெனவே 37 லட்சம் குடும்பத்தினா் அடையாளம் காணப்பட்டுள்ளனா். டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்படும்”எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி அமா்வு, வெள்ள நிவாரணம் என்பது உடனடியாக வழங்க வேண்டியது. ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிவாரணம் வழங்குவதைத் தாமதப்படுத்த முடியாது; அதை மறுக்க முடியாது. மேலும், நிவாரணம் வழங்குவது இந்த நேரத்தில் உடனடி தேவை என்பதால் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.

மேலும் நிவாரணம் வழங்குவதைத் தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. உண்மை பயனாளிகளுக்கு நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அன்றைய தினம் நிவாரணம் வழங்கியது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com