பேரிடரில் மீண்டோம்… சேலத்தில் சந்திப்போம்: தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மிக்ஜம் புயலின் பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

 
மிக்ஜம் புயலின் பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, சேலத்தில் சந்திப்போம் என தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், எத்தகைய இடர் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதில் அக்கறையும் பொறுப்பும் கொண்ட ஆட்சியை நடத்தி வருகின்ற காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகள் பலவற்றிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவேற்றப்பட்டு, மற்ற இடங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்தான் மிக்ஜாம் புயலையும் கனமழையையும் எதிர்கொள்ள நேரிட்டது. 

ஒரே நாளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையின் அளவு 40 சென்ட்டி மீட்டருக்கு மேல் என்பதால் சென்னை கடந்த 50 ஆண்டுகளில் காணாத பேரிடரை எதிர்கொண்டது. டிசம்பர் 4-ஆம் நாள் முழுவதும் கனமழை பெய்த நிலையில், மறுநாள் (டிசம்பர் 5) அதிகாலைக்குள்ளாக ஏறத்தாழ பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்திருந்தது. அதற்கு காரணம், திராவிட மாடல் அரசின் மழைநீர் வடிகால் பணிகளும், மழை பெய்த நேரத்திலும் மாநகராட்சி மற்றும் அரசுத் துறை பணியாளர்களின் அயராத உழைப்பும், இயல்பு நிலை திரும்பிடவும் அரசு இயந்திரங்கள் முழுமையான அளவில் தங்கள் பணிகளை மேற்கொண்டன. 

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கழகத்தினர் கழகப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களில் ஒருவனான நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி - ஒன்றிய - நகர கழக அமைப்புகளின் நிர்வாகிகள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து களப்பணியாற்றி மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நாடாளுமன்ற - சட்டப்பேரவை உறுப்பினர்களை நேரில் அனுப்பி பணிகளை விரைவுபடுத்தினேன். ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரிடமும் அலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தேன். 

மர்சனம் செய்வதற்கும் வீண்பழி சுமத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டினாலும், மக்களின் துயர் துடைக்க அவர்கள் முன்வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திராவிட முன்னேற்றக் கழகம் 2015 வெள்ள பாதிப்பிலும், கரோனா பேரிடரில் ஒன்றிணைவோம் வா என்ற பெயரிலும் மக்களின் துயரைத் துடைத்தது. ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் திமுக மிக்ஜம் கனமழை வெள்ள பாதிப்பில் மக்களின் துயர் துடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பேரிடரிலும் அரசியல் செய்யும் குணம் படைத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், மக்கள் நலன் காக்க சிந்தித்து செயல்படும் அரசு, ரூ.6000 நிவாரணம் அறிவித்து, அதற்கானப் பணிகளை முன்னெடுத்துள்ளது. 

திராவிட மாடல் அரசின் பணிகளை பிற மாநிலங்கள் கவனிக்கின்றன. திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தொடரும்.

பேரிடரிலிருந்து மீண்ட மக்களின் மகிழ்வான மனநிலை தொடர்ந்திட கண்டு, நம்முடைய பொறுப்புகளை உணர்ந்து, டிசம்பர் 24 அன்று சேலத்தில் சந்திப்போம்! களம் எதுவாயிலும் கலங்காது நிற்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்! என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com