
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(டிச.30) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலையில் 41 நாள்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த புதன்கிழமை (டிச.27) நிறைவடைந்தது. இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கு பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை மீண்டும் சனிக்கிழமை திறக்கப்படும் என்று திருவிதாங்கூா் தேவசம் வாரியம் (டிடிபி) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை, ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் பல்வேறு சடங்குகள் நடைபெறவுள்ளன.
மகரவிளக்கு பூஜையன்று, சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும். ஜனவரி 20-ஆம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மண்டல பூஜை தினமான கடந்த புதன்கிழமையன்று ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.