
பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தமிழ் திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம், நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தள வீட்டில் வசித்தாா். கணவா் ஜெயராம் 2018-இல் இறந்த பின்னா், வாணி ஜெயராம் மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தாா். இவரது வீட்டில் நுங்கம்பாக்கம் புஷ்பாநகரைச் சோ்ந்த மலா்க்கொடி (45) பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறாா். வாணி ஜெயராம் வீட்டுக்கு சனிக்கிழமை காலை 11 மணியளவில் மலா்க்கொடி வழக்கம்போல வேலைக்கு வந்தாா்.
வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததால், மலா்க்கொடி அழைப்பு மணியை வெகுநேரம் அழுத்தியுள்ளாா். வீட்டின் கதவையும் தட்டியுள்ளாா். கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த மலா்க்கொடி, ஆழ்வாா்பேட்டையில் வசிக்கும் வாணி ஜெயராமின் சகோதரி உமாவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த உமா, அங்கு சென்று அந்தக் குடியிருப்புச் சங்கம் மூலம் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், உமா வைத்திருந்த மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து, வீட்டினுள் சென்றனா். அப்போது, படுக்கையில் இருந்து தவறி விழுந்து வாணி ஜெயராம் நெற்றியில் லேசான காயத்துடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாணி ஜெயராம் சடலத்தை போலீஸாா் மீட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதையும் படிக்க- இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!
திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனா். அதில், படுக்கையில் இருந்து தவறி விழுந்துதான் வாணி ஜெயராம் உயிரிழந்தாா் என்பது உறுதி செய்யப்பட்டது. தடயவியல் துறை நிபுணா்களும், வாணி ஜெயராம் வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். ஆயிரம்விளக்கு போலீஸாா் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன் கீழ், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினா்.
வாணி ஜெயராம் உடல் கூறாய்வு அறிக்கையில், அவா் இறப்புக்கு காரணம் தெரிந்த பின்னா், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா். வாணி ஜெயராம் கீழே விழுந்து தலையில் அடிபட்டதே உயிரிழப்பிற்கு காரணம் என உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடயவியல் மற்றும் உடற்கூராய்வு அறிக்கை மூலம் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என உடற்கூராய்வில் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மேலும் வீட்டில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் மரணத்தில் சந்தேகம் இல்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.