பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் தைப்பூச விழா: திரளான பக்தர்கள் பஙே்கேற்பு

நீடாமங்கலம் வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) கோயிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பைரவசித்தர் பாடகச்சேரி மகான் ராமலிங்கசுவாமிகள்.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பைரவசித்தர் பாடகச்சேரி மகான் ராமலிங்கசுவாமிகள்.
Published on
Updated on
3 min read


நீடாமங்கலம்: நீடாமங்கலம் வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் (பைரவசித்தர்) கோயிலில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் -கும்பகோணம் சாலையில் பாடகச்சேரி பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடகச்சேரி கிராமம். இந்த கிராமம் வலங்கைமான் வட்டத்தைச் சேர்ந்தது. ராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த கிராமம் என்பதால் இந்த கிராமம் ஆன்மீக பூமியாகவும் சிறப்பிற்குரியது.

ராமலிங்க சுவாமிகளை பாடகச்சேரி மகான், பைரவசித்தர் என்றும் பக்தர்கள் அழைப்பர். ராமலிங்க சுவாமிகளுக்கு பாடகச்சேரியில் ஒரு மடம் உள்ளது. இந்த மடத்தில் பக்தர்கள் தியானம் செய்து சுவாமிகளை வழிபட்டு வருகின்றனர்.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் அல்லது பாடகச்சேரி சுவாமிகள் (1876-1949) கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கருகில் உள்ள பாடகச்சேரியில் தனது 12 வயதிலிருந்து வாழ்ந்தவர். வள்ளலார் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவர். இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் முக்கியமானதாகும். 

இவர் திருவொற்றியூரில் சமாதி அடைந்தார். இவர் சமாதி அடைந்த இடத்தில் ஒரு மடம் உள்ளது. பெங்களூரு, தஞ்சாவூர், சென்னையில் உள்ள கிண்டி போன்ற ஊர்களில் பாடகச்சேரி சுவாமிகளின் திருவுருவச் சிலைகள் உள்ளன. 

மௌனசுவாமியைப் போல கும்பகோணத்தில் இருந்த மற்றொருவர் பாடகச்சேரி சுவாமிகள். வெள்ளை வெளேர் என்று வேட்டி அணிந்திருப்பார். இடுப்பைச்சுற்றி வருகிற அதே துணியால் உடம்பை மூடிக் கழுத்துக்குப் பின்னால் கட்டிக் கொண்டிருப்பார். நெற்றி நிறைய விபூதி. ஒரு பித்தளைச் செம்பைக் கயிற்றில் சுருக்குப் போட்டுக் கோத்து அதைத் தம் வயிற்றுக்கு முன்னால் கட்டியிருப்பார். அவருடைய கண்ணைப் பார்த்தால் ஒரு தெளிவு இருக்கும். அவருடைய இடுப்பில் தொங்குகிற பாத்திரத்தில் அனைவரும் தங்களால் முடிந்த சில்லறையைப் போட்டுவிடுவர். கும்பகோணத்தில் எண்.14, கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் உள்ள கோதண்டபாணி என்பவர் இல்லத்தில் 1920ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 10 ஆண்டுகள் தங்கியிருந்தார்.

திருப்பணி
புகழ் பெற்ற கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் கோபுரத்தில் மரம் செடிகள் முளைத்து அது பிளப்புண்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அந்த கோபுரத்தை சீரமைக்க உறுதி கொண்டார். தனிநபராக அவர் சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து, அக்கோயிலை திருப்பணி செய்து 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துவைத்தார். 

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பைரவசித்தர் பாடகச்சேரி மகான் ராமலிங்கசுவாமிகள்.

திருநாகேஸ்வரம் கோயிலில் ராமலிங்க சுவாமிக்கு தனிச் சந்நிதியும், ராஜகோபுரத்தில் திருவுருவச் சிலையும் உள்ளன. நவகண்ட யோகம்- உடலினை ஒன்பது பாகங்களாக அரிந்து கிடைப்பத்தைப் போல செய்து சிவபெருமானை நினைத்து யோகம் செய்யும் முறைக்கு நவகண்ட யோகம் என்றும் பெயர். சித்தர்கள் செய்கின்ற சித்துகளில் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் இந்த சித்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தேர்ச்சி பெற்றிருந்தார். 

சிறுவயதில் இவர் செய்த நவகண்ட யோகமே இவரை சித்தர் என உறவினர்கள் அறிந்து கொள்ள காரணமாக இருந்துள்ளது. 

அத்துடன் அடியாட்கள் இவரை கொல்ல நினைத்து வரும்போது நவகண்ட யோகத்தில் இருந்தவரை கண்டு திகைத்தி ஓடியுள்ளார்கள். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை- பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கூழ்சாலை கும்பகோணத்தின் அருகேயுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. முத்துப்பிள்ளை மண்டபத்தில் சுவாமிகள் தங்கியிருந்த போது யோகமார்க்கத்தில் சென்றார். அவர் அங்கிருந்தபோது ஊரில் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடியது. 

அங்கு அவர் ‘கூழ்சாலை” ஒன்றைத் துவங்கி மக்களின் பசித்துயர் போக்கும் பணியினை மேற்கொண்டார். இந்த கூழ்சாலையில் எரிதாதா சுவாமிகள் சன்னதி, சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான சபை, சத்திய தரும சாலை, சத்திய வேத வைத்திய சாலை ஆகியவை அமைந்துள்ளன. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த ராமலிங்கசுவாமிகள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களை சீரமைத்துள்ளதுடன் அன்னதானங்களை வழங்கியுள்ளார். 

பாடகச்சேரியில் உள்ள மடத்தில் நாள்தோறும் காலை, மாலை என இறண்டு வேளையும் பூஜைகள் செய்யப்படுகின்றன. மாதாமாதம் பெளர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெளர்ணமியன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பைரவ பூஜையை சிறப்பாக செய்து வந்தவர் ராமலிங்கசுவாமிகள். இன்றும் பாடகச்சேரி மடத்தில் பைரவர்கள் (நாய்கள்) தங்கியுள்ளது. ஆடிப்பூரத்தன்று சுவாமிகள் பைரவர் பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே போல தற்போதும் ஆடிப்பூரத்தன்று ஆண்டுதோறும் பாடகச்சேரியில் பைரவ பூஜை நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 

தைப்பூச விழா
இக்கோயிலில் தைப்பூசவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர் பைரவசித்தர் மகான் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com