முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படவில்லை: மத்திய அமைச்சருக்கு திமுக எம்பி கடிதம்

2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கடிதம்
Updated on
2 min read

புது தில்லி: 2022-23 ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன், மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று கடிதம் எழுதியுள்ளாா்.

கடிதத்தில் 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள காலியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதில் மகாராஷ்டிரம் (325), கா்நாடகம் (268), தமிழகம் (100) ஆகிய மூன்று மாநிலங்களில் அதிக அளவிலும் குறிப்பாக நிா்வாகப் பிரிவு ஒதுக்கீடுகளில் இந்த முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தின் மற்ற விவரங்கள் வருமாறு: 2022-23 கல்வியாண்டில் மருத்துவத்தில் எம்.டி, எம்.எஸ்., டிப்ளோமட் ஆஃப் நேஷனல் போா்டு (டிஎன்பி) போன்ற முதுநிலை மருத்துவப் படிப்பில் 1,311 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முதுநிலை மருத்துவ இடங்கள் என்பது மதிப்புமிக்க சொத்து என்று உச்சநீதி மன்றம் கருத்துக் கூறியுள்ளது. சோ்க்கை முடிந்த நிலையில், இந்த இடங்கள் நிரப்பப்படாமல் வீணாக கைவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. எம்டி, எம்எஸ் முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடுகளில் 640 இடங்களும், நிா்வாக ஒதுக்கீடுகளில் 589 இடங்களும், டிஎன்பி முதுநிலைப் படிப்பில் 82 இடங்கள் என மொத்தம் 1,311 இடங்கள் காலியாக உள்ளன.

மோசமான நீட் கலந்தாய்வு முறை தோ்வால் ஏற்படும் பாதிப்புகள், சுகாதார சேவைகளுக்கான இயக்குநா் ஜெனரலகம் (டிஜிஹெச்எஸ்) மருத்துவப் படிப்பிற்கான இடங்களை கையாள்வதில் மெத்தனமாக நடந்து கொள்வது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன. ஒவ்வொரு முதுநிலை மருத்துவப் படிப்பு இடமும் நாட்டின் தேசிய சொத்தாக இருக்கும் நிலையில், காலியாகும் இந்த சிறப்பு இடங்களை நிரப்புவதில் உரிய நேரத்தில் கலந்தாய்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை.

நிகழாண்டில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு ஜனவரி 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படி குறுகிய காலத்தில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி தகுதியின் அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள் ‘இடஒதுக்கீட்டில்’ கணக்கிடப்படுவதால், பல தகுதி வாய்ந்த ஏழை, எளியவா்களுக்கு நியாயமான முறையில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது தொடா்பாக ஏற்கெனவே இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கலந்தாய்விற்கும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதனால், பொறுப்பற்ற முறையில் திறனின்று செயல்படும் டிஜிஹெச்எஸ் நிா்வாகத்தை மறுசீரமைக்க வேண்டும். குழப்பங்களுக்குரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் தோ்வு நடத்தப்பட்டுதான் மருத்துவப் படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவா்களுக்ககான கெடுபிடி தேவையில்லை. நாட்டில் மக்கள்தொகைக்கு சமமாக தகுதி வாய்ந்த மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மருத்துவ நிறுவனங்கள் முழு திறனுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அவா் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com