எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ.. முதல்வர் ஸ்டாலினின் சூசகப் பேச்சு

எப்போதெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 
எப்போதெல்லாம் கருணாநிதியின் பேனா குனிந்ததோ.. முதல்வர் ஸ்டாலினின் சூசகப் பேச்சு

எப்போதெல்லாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மறைந்த பரிதி இளம்வழுதி அவர்களின் மகனும், மாமன்ற உறுப்பினருமான  பரிதிஇளம்சுருதி - டாக்டர் நந்தினி (எ) கனிஷ்கா ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மணமக்கள் வழக்கறிஞர் பரிதி இளம்சுருதி - டாக்டர் நந்தினி என்கிற கனிஷ்கா அவர்களுக்கு நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது.

இதையும் படிக்க.. குடுகுடுப்பைக்காரரை வைத்து காங்கிரஸ் பிரசாரம்: அண்ணாமலை விமர்சனம்
    
1991-ல் சட்டமன்றத் தேர்தலை நாம் சந்தித்தபோது, ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாக வைத்து ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்தி,  நம்மை தோற்கடித்தார்கள். ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தோம். இதுவரை திமுக சந்திக்காத ஒரு தோல்வி அதுதான், இரண்டே இடத்தில் தான் வெற்றி பெற்றோம். மற்ற எல்லா இடத்திலும் தோற்றோம். ஒன்று துறைமுகம், இரண்டாவது எழும்பூர்.  துறைமுகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெறுகிறார், எழும்பூரில் பரிதி வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில் கருணாநிதி அவர்கள் இவ்வளவு பெரிய தோல்வியை மக்கள் தந்த காரணத்தால் என்னுடைய வெற்றியை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, நான் ராஜினாமா செய்கிறேன் என்று கருணாநிதி ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் ஒரே ஆள் பரிதி இளம்வழுதி, சட்டமன்றத்தில் தன்னந்தனியாக போய் நின்று ஆளுங்கட்சியின் வண்டவாளங்களை, அக்கிரமங்களை, அநியாயங்களையெல்லாம் தைரியமாக கைநீட்டி தட்டிக் கேட்கிற ஒரு வீரனாக, ஒரு போர்ப்படைத் தளபதியாக செயலாற்றியது, அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அவர் செய்த தவறுகளோ, நம் மீது கோபித்துக் கொண்டு சென்றதோ நினைவிற்கு வரவில்லை. அதுதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது. அதனால்தான் இன்று இந்த திருணமத்திற்கு வந்திருக்கிறேன். தலைவர் அதைப் பார்த்துவிட்டு, பலமுறை அழைத்துப் பாராட்டியிருக்கிறார். நினைத்துப் பார்க்கிறேன்.

முரசொலியில் கடிதம் எழுதினார். வீர அபிமன்யூ என்று பட்டம் கொடுத்தார், இந்திரஜித் என்று பட்டம் கொடுத்தார். அப்படிப்பட்ட நிலையிலிருந்து பாடுபட்டவர் நம்முடைய பரிதி இளம்வழுதி. பல பொய் வழக்குகள், கொலைவெறித் தாக்குதல்கள் இப்படி பல நடந்திருக்கிறது.

அப்படிப்பட்ட பரிதி இளம்வழுதியினுடைய அருமை மகனுக்குத்தான் இன்றைக்கு திருமணம். இன்றைக்கு தேதி பிப்ரவரி 10. இதே பிப்ரவரி 10, 1969-ல் தான் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். திட்டமிட்டு இந்த தேதியை ஏற்பாடு செய்து நடத்துகிறாரா என்று எனக்குத் தெரியாது, ஆனால் பொருத்தமாக அமைந்திருக்கிறது. 

கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்று, அது அண்ணா மறைவிற்குப் பிறகு 1969-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் தான் பிப்ரவரி 10. அந்தத் தேதியில்தான் இன்றைக்கு தம்பி பரிதி இளம்சுருதிக்கு திருமணம் நடக்கிறது. ஐந்து முறை தொடர்ந்து கருணாநிதி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றியிருக்கக்கூடிய, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து பணியாற்றியிருக்கக்கூடிய, எப்போதெல்லாம் தலைவர் கருணாநிதியின் பேனா குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழ்நாடு நிமிர்ந்திருக்கிறது.

வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கியதற்காக பாடுபட்ட பேனா தான் அவர் பேனா. டைடல் பார்க்கை வடிவமைத்து அதை உருவாக்குவதற்கு கையெழுத்து போட்ட பேனாதான் அவருடைய பேனா. பூம்புகாரை உருவாக்கித் தந்ததற்கு, அதற்கும் திட்டமிட்டது, அதற்கும் கையெழுத்து போட்ட பேனாவும் கருணாநிதி பேனாதான். குடிசைகளை மாற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்ட பேனாவும் அவருடைய பேனாதான். இலட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பேனாவும் கருணாநிதியுடைய பேனாதான். தமிழ் சமுதாயத்தினுடைய தலையெழுத்தையே மாற்றி அமைத்த பேனாவும், தலைவர் கருணாநிதியுடைய பேனா தான். அந்த பேனா எழுதிய இலட்சியம் தான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சிக்கு கையேடாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு மணமகன் பரிதி இளம்சுருதி அவர்கள் மாநில அளவில் அயலக அணியினுடைய துணைச் செயலாளராக இருந்து, மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்து, கட்சிக்கும் மக்களுக்கும் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்பான நிலையில் இருந்து தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவரைப் பார்க்கிறபோது, எனக்கு பரிதி இளம்வழுதியின் நினைவுதான் வரும்.

 நாடாளுமன்றத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று செய்தி எல்லாம் தொடர்ந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இன்றைக்கு நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக இருக்கக்கூடிய டி.ஆர்.பாலு அவர்கள் நாடாளுமன்றத்திலே எடுத்து வைக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்களா? சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி விளக்கமாக பேசி அதை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கேட்கிறார்.  பதில் இல்லை. 

வருஷத்துக்கு இரண்டு கோடி பேர்களுக்கு  வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம் என்று சொல்லிதான் பிரதமாராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தார். என்ன ஆச்சு? ஒரு கேள்வி கேட்கிறார். பதில் இல்லை. வெளிநாட்டில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம், நான் கைப்பற்றுவேன், அப்படி கைப்பற்றி அதைக் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 இலட்ச ரூபாயை  வங்கிக் கணக்கில் போடுவேன், நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? 15 இலட்சம் வேண்டாம், 15 ஆயிரம் ரூபாய், 15 ரூபாயாவது போட்டிருக்கிறார்களா? இல்லை.

அதேபோல நம்முடைய நாடாளுமன்ற குழுவின் துணைத்தலைவராக இருக்கக்கூடிய அருமை தங்கை கனிமொழி அவர்கள், கேட்கிறார், எய்ம்ஸ் என்ன ஆச்சு? 2021 பட்ஜெட்டில் அறிவித்தீர்கள். அதற்கு பிறகு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களே மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு போயிருக்கிறார். இதுவரைக்கும் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஒரு செங்கலை வைத்து நம்முடைய தம்பி உதயநிதி அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்த செய்தி எல்லாம் பார்த்திருப்பீர்கள். அதற்கு பிறகுகூட வெட்கம் வந்திருக்க வேண்டாம். மறுபடியும் பாராளுமன்ற தேர்தல் வருமே, தம்பி இன்னொரு செங்கலை எடுத்து கிளம்பிடுவானே என்ற பயம் வர வேண்டாம்.  இந்த நிலையில், கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒன்றுக்கும் பதில் இல்லை.

அதேபோல ஆ.ராசா அவர்கள் கேள்விக் கணைகளை தொடுக்கிறார். பதில் இல்லை. தம்பி தயாநிதி மாறன் அவர்கள் ரொம்ப வேதனையோடு வந்து வெளியில் சொல்லுகிறார். நாடாளுமன்றத்தில் “கோரமே” இல்லை. மோடி பேசியவுடன் அத்தனை பேரும் போய்விட்டார்கள்.

 அதேபோல மாநிலங்கவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் ரொம்ப அழுத்தந்திருத்தமாக உப்புமாவையே அடையாளம் காட்டி பேசினார். இப்படிப்பட்ட நிலையிலேதான், இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு எப்படி 2021ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல, 2024-ல் இந்தியாவிற்கே விடியலை ஏற்படுத்தித் தரக்கூடிய ஒரு நிலை வரப்போகிறது. அதற்கு நீங்கள் தயாராக இருங்கள், தயாராக இருங்கள் என்று கேட்டு, அந்தப் படை வரிசையில் ஒருவனாக தம்பி பரிதி இளம்சுருதி அவர்கள் இருக்கிறார். எனவே, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் வாழ்த்துகிறேன். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் இருந்து வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று உன் தந்தை ஸ்தானத்தில் இருந்து உன்னை வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com