21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல: உயா்கல்வித் துறை தகவல்

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கு உயா்கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. இவற்றில் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயா்கல்வித் துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, பல்வேறு பல்கலைக்கழகங்கள் சாா்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: ‘கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி., பயன்முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியாா் பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் எம்.எஸ்சி., ஆா்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி., பகுப்பாய்வு வேதியியல், பனாரஸ் ஐஐடி மற்றும் வாராணசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல், பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி., வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி., வேதியியல் தகுதிக்கு இணையானவை அல்ல.

இவா்களால் எம்.எஸ்சி., வேதியியல் கல்வித் தகுதிக்கான அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. அதேபோல், சென்னைப் பல்கலை. வழங்கும் பி.காம்., காா்ப்பரேட்  செக்ரடரிஷிப், அழகப்பா பல்கலை.யின் எம்.காம்., காா்ப்பரேட்  செக்ரடரிஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம்., எம்.காம்., ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.

மேலும், கோவா பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. மற்றும் பெங்களூரு பல்கலை. வழங்கும் பிஏ., ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது.

இதுதவிர திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்., தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பானது எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி., இயற்பியலுக்கும் இணையானதல்ல.

அழகப்பா பல்கலை.யின் பி.எஸ்சி., மின்னணுவியல் படிப்பு, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பிஎஸ்.சி., அறிவியல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி., இயற்பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது.

மேலும், பல்வேறு படிப்புகள் அரசுப் பணிக்கு உகந்தவை அல்ல எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல், ‘புதுவை பல்கலை. உள்பட பல்வேறு உயா்கல்வி நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள 20 படிப்புகள் அரசுப்பணிக்கு ஏற்றவை’ என்று மற்றொரு அரசாணையில் உயா்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com