மீனவர் பலி: தமிழக - கர்நாடக எல்லையில் தொடரும் பதற்றம்; போலீசார் குவிப்பு!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டாவது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் இரண்டாவது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் தேதி பாலாற்றங்கரையில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டின்போது காணாமல் போன கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா(40) என்பவரின் சடலம் நேற்று தமிழக எல்லையில் உள்ள பாலாற்றங்கலையில் மீட்கப்பட்டது.

சடலத்தைக் கைப்பற்றிய ஈரோடு மாவட்டம் பருகூர் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் தமிழக -கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாலாறு வனப்பகுதியில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில் ஏராளமான கர்நாடக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டின்போது பலியான ராஜாவின் சொந்த கிராமமான காரைக்காட்டிலும், அவரது குடும்பத்தார் தற்போது குடியிருக்கும் கோவிந்தபாடியிலும் நூற்றுக்கணக்கான தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கொளத்தூர் நான்கு ரோடு, கருங்கல்லூர், பாலவாடி, சத்யாநகர், கோவிந்தபாடி, காரைக்காடு பகுதிகளில் தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக கிராம மக்கள் கூட்டமாக பாலாறு பகுதிக்கு செல்வதைக் கண்காணிக்க சின்னகாவல் மாரியம்மன் கோவில் அருகே தமிழக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் நேற்று இரவு போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற நபர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். ராஜாவின் உறவினர்கள் அவரது வீட்டிற்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பித்தவாறு கோவிந்தப்பாடியில் முகாமிட்டுள்ளனர். பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்த வனத்துறையினருக்கு பதிலாக அப்பொறுப்புகளில் கர்நாடக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை கட்டடங்களுக்கும் கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியையொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் சென்று வருவார்கள். அதற்காக  தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மேட்டூர், ஈரோட்டிற்கு வந்து செல்லும் கர்நாடக மாநில அரசு போருந்துகள் இயக்கப்படவில்லை. மாதேஸ்வரன் மலை செல்லும் பக்தர்கள் அச்சமின்றி செல்லவும் போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும் தமிழகம் மற்றும் கர்நாடக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து செல்லும் கார்கள், மோட்டார் சைக்கிள் வழக்கம்போல் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்குச் சென்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com