

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 130ஆம் ஆண்டு பெரியாண்டவர் மகா சிவராத்திரி மற்றும் சிம்ம வாகன மயானக் கொள்ளை உற்சவம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்ட பிறகு தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
செங்கல்பட்டில் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை உற்சவம் பருவதராஜகுல சமூகத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 130 ஆம் ஆண்டு பெரியாண்டவர் மகா சிவராத்திரி, சிம்ம வாகன மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பந்தக்கால் நடப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து ஆலய முகப்பு வாயிலில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சனிக்கிழமை மாலை பாலாற்றங்கரையிலிருந்து 1008 பால்குடம் சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. பாலாற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு, ஜீவானந்தம் தெரு, மேட்டு தெரு, ஜிஎஸ்டி சாலை காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, ஓசூர் அம்மன் கோயில் கங்கை அம்மன் கோயில் வழியாக சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அலங்காரத் தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை ஊர்வலம் நடைபெற்றது.
இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி திருத்தேர் உள்ளிட்ட வாகனங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இழுத்தனர். மேலும் அழகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். உடலில் எலுமிச்சை பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலில் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் அம்மன் வேடம், குறத்தி வேடம், அங்காளபரமேஸ்வரி வேடம், சமயபுரம் மாரியம்மன் வேடம், காளி வேடம் என பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்வலத்தில் ஆடிபடி வந்தனர். இந்த ஆண்டு ஏராளமான குழந்தைகள் வேடமிட்டு உற்சாகமாக சோர்வின்றி வணங்கி சென்றனர்.
பழவேலி இடுகாட்டில் ஊர்வலமாக வந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் முன்னிலையில் மயானக் கொள்ளை உற்சவம் நடைபெற்றது. திருவிழாவை பக்தர்கள் உற்சாகமாகவும் நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மயானக் கொள்ளை உற்சவத்தை கண்டுகளித்தும் மயானத்திற்கு சென்று மயானக் கொள்ளை பார்த்தும் அம்மனை வழிபட்டனர்.
குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதற்காகவும், நோய்நொடி இல்லாமல் இருப்பதற்காகவும் பக்தர்கள் காசுகளையும் கொழுக்கட்டை சூறை விட்டனர். விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள் தானியங்களை சூறை விட்டனர். வழிநெடுகிலும் அன்னதானம், குளிர்பானங்கள் என வழங்கி பக்தர்கள் மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.