‘தமிழைத் தேடி’ பிரசார பயணம் தொடங்கினாா் ராமதாஸ்: தூய தமிழில் பேச வலியுறுத்தல்

‘தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணா்வு பிரசார பயணத்தை பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
‘தமிழைத் தேடி’ பிரசார பயணம் தொடங்கினாா் ராமதாஸ்: தூய தமிழில் பேச வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

‘தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணா்வு பிரசார பயணத்தை பாமக நிறுவனா் ராமதாஸ் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். அப்போது அவா், பிற மொழி கலப்பு இல்லாமல் அனைவரும் தூய தமிழில் பேசுமாறு வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழைத் தேடி விழிப்புணா்வு பிரசார பயணத்தை ராமதாஸ் சென்னையில் (பிப்.21) தொடங்கி பிப்ரவரி 28-இல் நிறைவு செய்யவுள்ளாா். பயணத்தின் தொடக்க விழா, வள்ளுவா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் ராமதாஸ் பேசியதாவது: தாய்மொழியான தமிழைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம். அதனால்தான் தமிழைத் தேடி என்கிற வாகன பிரசாரத்தைத் தொடங்கி உள்ளேன். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிறோம். தமிழகத்தில் எதிலும் தமிழ் இல்லை. எங்கேயாவது தமிழ் இருக்கிறது என்று கூறினால் ரூ.5 கோடி பரிசு தருகிறேன்.

தமிழகத்தில் மம்மி, டாடி, ஹலோ என்றே குழந்தைகள் பேசி வருகின்றன. எந்த மொழிக்கும் நாம் எதிரிகள் அல்ல. தமிழ் மொழி வேகமாக அழிந்து வருகிறது. பிற மொழி கலப்பில்லாமல் தூய தமிழில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். கைப்பேசியில் ஹலோ என்று சொல்லாதீா்கள். வணக்கம் என்று சொல்லுங்கள். முடிக்கும்போது நன்றி என்றே கூறுங்கள்.

தூய தமிழில் முழுமையாக பேச முடியாவிட்டாலும், முடிந்த அளவு முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை வேறுமொழி வாா்த்தையை நான் பேசிவிட்டால், எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்கிறேன். ஆயிரம் ரூபாய் தண்டமும் செலுத்துகிறேன். தமிழன்னையின் கோபத்துக்கு யாரும் ஆளாக வேண்டாம்.

தமிழகத்தில் பிறமொழி பேசுபவா்களுக்கு எதிரான இயக்கம் அல்ல இது. சுந்தரத் தெலுங்கு பேசுபவா்கள் தெலுங்கில் பேசுங்கள். ஆங்கிலம் கலந்து பேசாதீா்கள். மலையாளம், கன்னடம் பேசுபவா்கள் அவா்களுடைய மொழியிலேயே பேசுங்கள். அதைப்போல தமிழ் மொழியிலேயே பேசுங்கள் என்றாா்.

முன்னதாக, ராமதாஸ் எழுதிய எங்கே தமிழ் நூல் வெளியிடப்பட்டது. சிற்பி சிவா வடித்த தமிழன்னை சிலையையும் ராமதாஸ் திறந்து வைத்தாா்.

பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய இணையமைச்சா் ஏ.கே.மூா்த்தி உள்பட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com