குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000: பட்ஜெட்டில் அறிவிப்பு!

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சம்பத் நகரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சம்பத் நகரில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஈரோடு: குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை வரும் மார்ச் மாதம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு சனிக்கிழமை காலை 10 மணி தொடங்கி பிரசாரம் செய்துவருகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு சம்பத் நகர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  

திமுக தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தலின் போது வாக்குறுதியாக வழங்கிய திட்டங்களில் ஒன்றான மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தில் கையெழுத்திடப்பட்டது. தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கான முதல்வரின் காலை உணவு திட்டம் இந்த இரு திட்டங்களும் இந்தியாவிலேயே வேற எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை, தமிழகத்தில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு ஒன்றரை லட்சம் இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்திலேயே சிறப்பாக நாம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் அது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஆண்டுக்கு 10 திட்டங்களை கோரிக்கையாக பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுதான் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டம். அதேபோன்று நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

பத்திரிகையாளர் நல வாரியம், கலைஞர் எழுதுகோல் விருது, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, பெரியாரின் பிறந்தநாளை சமூகநிதி நாளாக அறிவிப்பு என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றியுள்ளது.

மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி, தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாங்கள் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக, தவறான தகவலைத் தெரிவிக்க விரும்பவில்லை. திமுக தேர்தலில் அறிக்கையில் அறிவித்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

நான் தற்பொழுது நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு உள்ளேன் இவற்றைப் பார்த்தாவது அவர் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் தேர்தல் வாக்குறுதியை கூறிய திட்டங்கள் அனைத்தும் ஐந்தாண்டு நிறைவேற்றுவதற்காக கூறப்பட்டது. அதற்கு ஐந்தாண்டுகள் தேவையில்லை, இந்த ஆண்டிற்குள்ளாகவே நிறைவேற்றி விடுவோம்.

தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சாரியாக இருந்திருந்தால், உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில், பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்ற தேதியை  அறிவிக்கவுள்ளோம்.

இந்த ஆட்சி முறையாக நடக்கிறதா? என்பதை எடை போடும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் திருமகன் ஈவெரா 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்குமளவிற்கு வெற்றி அமைய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com