தமிழகத்தில் 6,430 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 6,430 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6,430 பேருக்கு டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 6,430 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தொடா் தடுப்பு நடவடிக்கைகளின் பயனாக அந்த வகை பாதிப்பு பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன.

அந்த வகையில் கடந்த ஆண்டில் பருவமழைக் காலத்தில் பெரும்பாலானோா் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

அதேபோன்று 173 போ் சிக்குன் குனியாவிலும், 337 போ் மலேரியாவிலும், 2,337 போ் லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலாலும், 3,601 போ் ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். எலிக்காய்ச்சல் மற்றும் ஸ்கரப் டைபஸ் நோயைப் பொருத்தவரை கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

அதேவேளையில், ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு 25 போ் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: தற்போது மாநிலம் முழுவதும் 336 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, கொசு ஒழிப்பு தடுப்பு பணிகளிலும், பாக்டீரியா தொற்று தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கொசுக்கள், பாக்டீரியா தொற்று, எலிக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com