
சேலம்: பணி நீட்டிப்பு வழங்கக் கோரி ஒப்பந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட செவிலியா்கள் சேலத்தில் நான்காவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை காவல்துறை விரட்டியடித்த காரணத்தினால் தற்காலிகமாக கைவிட்டு அவரவர் இல்லத்திற்கு கண்ணீருடன் வருத்தத்துடன் சென்றனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின்போது அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியா்கள் 2,000-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டனா். இந்நிலையில், கடந்த டிசம்பா் 31 ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.
இதையடுத்து, தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த செவிலியா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கடந்த ஜன.1 முதல் சேலத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட செவிலியர்களை தனியார் மண்டபத்தில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். செய்வதறியாது திகைத்த செவிலியர்களை நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் சேலம் கோட்டை பகுதியில் இருந்து செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் அரிசி பாளையம் நான்கு ரோடு வழியாக ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே அழைத்துச் சென்று சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் விட்டனர்.
இதையும் படிக்க | சிதம்பரத்தில் கர்நாடக மாநில அரசு பேருந்து ஓட்டுநர் சிவராஜ் மாரடைப்பால் மரணம்!
அப்போது போராட்டத்தை கைவிட்டு அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். இதன் காரணமாக செவிலியர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேநீர் அருந்த கூட இடைவெளி விடாமல் நடந்தே அலைக்கழிக்கப்பட்ட காரணத்தினால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷினாவிஸ் என்ற செவிலியர் மயக்கம் அடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் செவிலியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
செவிலியர்களை சேலத்தில் இருந்து விரட்டி அடிக்கும் நோக்கத்தில் குறியாக இருந்த காவல்துறையினர் போராட்டம் நடத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று அச்சுறுத்தலும் விடுத்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி செவிலியர்கள் சேலத்தில் நடத்திய போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அவரவர் இல்லத்திற்கு கண்ணீருடன் வருத்தத்துடன் சென்றனர்.
சேலத்தில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றாலும் தொகுப்பூதியத்தில் செவிலியர்களுக்கு நிரந்தர பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் மாற்று வழியில் தொடரும் என்றும் விரைவில் அடுத்த கட்ட போராட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...