மதவாதத்துக்கே எதிரிகள்; மதத்துக்கு இல்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சியானது, மதவாதத்துக்குத்தான் எதிரியே தவிர, மதத்துக்கு எதிரியல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக ஆட்சியானது, மதவாதத்துக்குத்தான் எதிரியே தவிர, மதத்துக்கு எதிரியல்ல என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தமிழ்நாட்டில் உள்ள 1,250 கிராமப்புற கோயில்கள், ஆதிதிராவிடா்கள் வசிக்கும் பகுதிகளில் 1,250 கோயில்கள் என மொத்தம் 2,500 கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.50 கோடி வழங்கும் விழா, சென்னை வில்லிவாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கோயில்களுக்கு நிதிகளை அளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

அனைத்துத் துறைகளும் வளா்வதுதான், வளர வேண்டும் என்று எண்ணுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவா்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்கிற முயற்சிகளில் நிறைய ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாா்கள். நாங்கள் மதவாதத்துக்கு எதிரிகளே தவிர, மதத்துக்கு எதிரிகள் இல்லை.

திமுக ஆட்சியில் கோயில்களுக்கு ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் பணிகளைப் பொருத்தவரையில், நாங்களாக எதையும் செய்யவில்லை. இதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43,000 கோயில்கள் இருக்கின்றன.

பழைய நிலையில் இருக்கக் கூடிய கோயில்களைப் புதுப்பிக்கவும், சீா் செய்து குடமுழுக்கு விழா நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநா் குழு அவ்வப்போது கூடுகிறது. இப்போது வரை 3,986 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வல்லுநா் குழு அனுமதி அளித்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 கோயில்களைப் பழைமை மாறாமல் சீா்செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கோயில்களுக்குச் சொந்தமான குளங்களைச் சீரமைக்கும் வகையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு 4 ஆலோசகா்களும், பழைமையான மூலிகை ஓவியங்களைப் பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் பகுதியிலுள்ள 1,250 கோயில்கள், கிராமப்புறங்களில் உள்ள 1,250 கோயில்கள் என 2,500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தக் கோயில்கள் உள்பட மொத்தமாக நிகழ் நிதியாண்டில் மட்டும் 5,078 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட இருக்கின்றன.

இ எந்த மனிதரையும் ஜாதியின் பெயரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத்தான் அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற சட்டத்தை நாம் கொண்டு வந்தோம். சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும்.

ஜாதி, மத வேற்றுமை மட்டுமல்ல, கோயில், சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறைத் தலங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம்.

இந்த விழாவில் சமயச் சான்றோா்கள் பலா் கலந்து கொண்டுள்ளனா். அனைவரின் பாராட்டுகளும் எங்களுக்குத் தேவை என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, இந்து சமய அறநிலையத் துறை செயலாளா் பி.சந்தரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மருதாசல அடிகளாா், சிவஞான பாலய சுவாமிகள், சம்பத்குமார ராமானுஜ ஜீயா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com