சென்னையில் இடிக்கப்படும் இரு மேம்பாலங்கள்! என்ன காரணம்?

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ளன. 
சென்னையில் இடிக்கப்படும் இரு மேம்பாலங்கள்! என்ன காரணம்?

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்கள் இடிக்கப்பட உள்ளன. 

சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பாதாள மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் வகையில் அடையாறு சந்திப்பில் உள்ள மேம்பாலமும் ராதாகிருஷ்ணன் சாலை-ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கட்டப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடையாறு சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், மெட்ரோ பணி துவங்குவதற்கு முன்னதாக, இடிக்கப்படும் பகுதிக்கு மாற்றாக புதிய இருவழி மேம்பாலம் கட்டப்படும். பின்னர் இடிக்கப்பட்ட பகுதி நான்கு வழிச்சாலை மேம்பாலமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுபோல, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலம் இடிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கட்டப்படும். 

இந்த மேம்பாலங்களின் கீழ் அமைக்கப்படவுள்ள இரண்டு (பாதாள)மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் மில்க் காலனியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 45.8 கிமீ தொலைவில் அமையவுள்ள மெட்ரோ 2-ம் கட்ட பணியின் 3 ஆவது பாதையின் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோ ரயில் பணிகள் 2026-க்குள் முடிக்கப்படும்.

அடையாறு சந்திப்பில், சிஎம்ஆர்எல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதால், போக்குவரத்தை சீர்செய்ய, பாதை இருவழியாக மாற்றப்படும். அடையாறு பேருந்து பணிமனைக்கு கீழ் மெட்ரோ ரயில் நிலையம் வருவதால் பாலம் இடிக்கப்பட்டு மெட்ரோ பணிகள் முடிந்தபிறகு மீண்டும் அடுத்த ஆண்டு கட்டுமானம் தொடங்கும். இந்த மேம்பாலம் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூருடன் அடையாறை இணைக்கிறது. 

அடையாறு சந்திப்பில், பழைய மேம்பாலத்திற்கு இணையாக, புதிய மேம்பாலம் கட்டப்படுவதுடன், பணிகள் முடிந்தபிறகு பழைய மேம்பாலத்தையும் நான்கு வழிச்சாலையாக மாற்றுவோம். 

தொடக்கத்தில், பாலத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தற்காலிகமாக இரும்புப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்காலிக பாலத்தைக் கட்டி அகற்றுவதில் எந்த பயனும் இல்லை என்பதாலும் இது கான்கிரீட் பாலத்தை விடவும் பட்ஜெட் அதிகம் என்பதாலும் வேறு பாலத்தை கட்ட முடிவு செய்தோம்.

ஆர்.கே.சாலை - ராயப்பேட்டை சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை நோக்கிச் செல்லும் மேம்பாலத்தின் 50% பகுதி இடிக்கப்படும். மேம்பாலம் அகற்றப்பட்ட பின், அங்கு போக்குவரத்து பாதையை மாற்றும் திட்டம் உள்ளது' என்றார். 

அடையாறு பேருந்து பணிமனையின் 15மீ ஆழத்திலும் ஆர்.கே.சாலையில் 17மீ ஆழத்திலும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com