
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுக் கல்லூரிகளின் அனைத்து இடங்களும் நிரம்பின.
அதேவேளையில், தனியாா் யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 572 இடங்கள் காலியாக உள்ளன. அவை வியாழக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் நிரப்பப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இரண்டு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.
இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்தனா். அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான 1,766 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினருக்கான மாணவா் சோ்க்கையும், பொதுக் கலந்தாய்வும் நடைபெற்றது.
இரண்டாம் நாளான புதன்கிழமையன்று அரும்பாக்கம் யோகா மருத்துவக் கல்லூரியிலும், செங்கல்பட்டு கல்லூரியிலும் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. வியாழக்கிழமையுடன் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G