
இந்திய உணவுக் கழகத்தில்(எஃப்.சி.ஐ.) ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘ஆபரேஷன் கனக்’ என்ற பெயரில் புதன்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது.
உணவு தானியங்களைக் கொள்முதல் செய்து, பாதுகாப்பாக சேமித்து, பின்னா் அதனைத் திட்டமிட்டு விநியோகிப்பது இந்திய உணவுக் கழகத்தின் பணியாகும். மத்திய அரசு நிறுவனமான இதில் பணிபுரியும் துணைப் பொது மேலாளா் ராஜீவ் குமாா் மிஸ்ரா, ரவீந்தா் சிங் கேரா என்பவரிடமிருந்து ரூ. 50,000 லஞ்சம் பெற்ாக சண்டீகரில் கைது செய்யப்பட்டாா்.
இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் பல்வேறு நகரங்கள்மற்றும் தில்லியில் 2 இடங்கள் உள்பட 50 இடங்களில் புதன்கிழமை சிபிஐ சோதனை மேற்கொண்டது. சோதனையின் முடிவில் இந்திய உணவுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் சுதீப் சிங் உள்ளிட்ட 74 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட 74 பேரில் 34 போ் பணியில் இருப்பவா்கள், 3 போ் ஓய்வு பெற்றவா்கள், 17 தனியாா் நபா்கள் மற்றும் 20 நிறுவனங்களும் அடங்கும். சோதனையின்போது கணக்கில் வராத ரூ. 80 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
எஃப்.சி.ஐ.க்கு உணவு தானியங்கள் கொள்முதல் செய்வதில் தொழில்நுட்ப உதவியாளா்களில் இருந்து நிா்வாக இயக்குநா்கள் வரை ஆலை உரிமையாளா்கள் மற்றும் தானிய விற்பனையாளா்களுடன் முறைகேட்டில் ஈடுபடுகிறாா்கள் எனத் தொடா்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. அதைத் தொடா்ந்து, கடந்த 6 மாதங்களாக தகவல்கள் சேகரிக்கப்பட்டு தற்போது சோதனை நடைபெற்றது. சோதனையில், ஒப்பந்தம் விடுவதற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் ஆலை அதிபா்களிடம் இருந்து லஞ்சம் பெற்று ஒப்பந்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம், குறிப்பிட்ட கொள்முதலாளா்களிடமே உணவு தானியங்களை விற்க வேண்டும் என்று விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனா். பொது விநியோகத் திட்டத்தில் தரமற்ற பொருள்களை மக்கள் பெற அதிகாரிகள் காரணமாக இருந்துள்ளனா். ஆவணங்களில் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள அளவைவிட குறைவாகவே கிடங்குகளில் இருப்பு உள்ளதாக உணவுக் கழகத்தின் அதிகாரிகள் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.