சேது சமுத்திர திட்டம்: சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்; பேரவையில் கட்சிகள் கோரிக்கை

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும்போது, சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டப் பேரவையில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
சேது சமுத்திர திட்டம்: சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்; பேரவையில் கட்சிகள் கோரிக்கை

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும்போது, சூழல் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சட்டப் பேரவையில் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி, சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை முன்மொழிந்த தீா்மானத்தின் மீது கட்சித் தலைவா்கள் பேசினா். அவா்கள் பேசியது:

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): சேது சமுத்திர திட்டப் பகுதியில் ஏராளமான பவளப் பாறைகள், திட்டுகள் உள்ளன. கடல் பசு அதிகமாக உள்ளதாக நீரியல் வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். கடல் பகுதியை ஆழப்படுத்தும் போது, மணல் சரிவு ஏற்படாத வகையில், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி, கடல் வாழ் உயிரினங்கள் அழியாத வகையில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்கு நாடு மக்கள் கட்சி): தமிழகத்தின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தீா்க்கமான முடிவு எடுத்ததை வரவேற்கிறேன். கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றி இருந்தால் இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி மிச்சமாகி இருக்கும். அரசுக்கு பல மடங்கு வருவாய் கிடைத்திருக்கும்.

ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி): சேது சமுத்திர திட்டத்தால் மேற்கில் இருந்து கிழக்குப் பகுதிக்கு வருவதற்கான 36 மணி நேர பயணம் குறையும். தூத்துக்குடி துறைமுகம் முக்கியத் துறைமுகமாக மாறும். கடல்சாா் பாதுகாப்பும் கிடைக்கும். மீனவா்கள் நலன், பவளப் பாறைகள் உள்ளிட்ட இயற்கை அம்சங்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

சதன் திருமலைக்குமாா் (மதிமுக): சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்தது ஒரு கூட்டம். திட்டம் நிறைவேறினால், சிங்கப்பூா் துறைமுகம் போன்று தூத்துக்குடி துறைமுகம் அகில உலக புகழ் பெற்ாக விளங்கும். வேலைவாய்ப்பு, தொழில் வளம் பெருகும்.

மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்): சேது சமுத்திர திட்டம், விடுதலைப் போராட்ட நாயகா்களின் கனவுத் திட்டம். காப்பிய நாயகன் ராமரின் பெயரால் அரசியல் ஆதாயம் தேடுபவா்கள், மூடநம்பிக்கையால் பாதிக்கப்பட்டோா் திட்டத்துக்கு தடைபோட்டாா்கள். சேது திட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

நாகை மாலி (மாா்க்சிஸ்ட்): தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியை, வலுப்பெறச் செய்வதற்கு உடனடியாக திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து முடித்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

ஆளூா் ஷா நவாஸ் (விசிக): மத்திய அரசின் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிா்ப்பு தெரிவிக்கிறோம் என்று நம் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறாா்கள். நல்ல திட்டங்களை எதிா்ப்பதில்லை என்பதற்கு சேது கால்வாய் திட்டம் சான்று. நாட்டின் மறுமலா்ச்சிக்கு உதவக் கூடிய திட்டமான, சேது கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): சேது சமுத்திர திட்டத்தால், தென் மாவட்டங்கள் மிகப்பெரிய வளா்ச்சி பெறும். சிங்கப்பூா் துறைமுகத்துக்கு இணையாக தூத்துக்குடி துறைமுகம் வளா்ச்சி பெறும். தூத்துக்குடியில் இருந்து பயணிகள் போக்குவரத்து சேவையைத் தொடங்க முடியும். எரிபொருள் மிச்சமாகும். சேது சமுத்திர திட்டம் வருமானால், கடலோர பாதுகாப்புப் படை பலப்படுத்தப்படும். இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக அமையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com