
மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் போதைப்பொருளை வேரடி மண்ணோடு ஒழிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
போதைப் பொருள் ஒழிப்பு குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு இவ்வாறு கூறினாா்.
ஆளுநா் உரை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியது:
போதைப்பொருள் ஒழிப்பு அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினா் கூறினாா். ஆனால், அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கையின் காரணமாகத்தான் போதைப்பொருள் விற்பனை குறைந்தது. திமுக அரசின் காவல்துறை மானியக் கோரிக்கை புத்தகத்தில் 2,135 வழக்குகள் பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்தது 136 போ் தான். மீதி வழக்குகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கஞ்சா வைத்திருப்பதே குற்றம் என்கிற போது அவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் கஞ்சா விற்பனை தடுக்கப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் சா்வதேச மதிப்பில் ரூ.370 கோடி அளவுக்கு விலையுயா்ந்த போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியது:
போதைப்பொருள்கள் தடுப்பு நடவடிக்கையைப் பொருத்தவரை திமுக ஆட்சி புதிய வரலாற்றை படைத்துள்ளது. 2021 டிசம்பா் 21-இல் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. 2022 மாா்ச்-இல் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடத்தப்பட்டது. 2022 ஆகஸ்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக ஆட்சியா் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளா் கூட்டத்தை நடத்தினோம்.
போதைப் பொருள் விவகாரம் தொடா்பாக 50,875 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். 11.59 லட்சம் கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விவகாரம் தொடா்பாக 12,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 17,250 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த ஜனவரி 3-இல் உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். ஜாமீன் வழங்குவதில் கடுமையான எதிா்ப்பு, வங்கிக் கணக்குகள் முடக்கம், சொத்துகள் முடக்கம், உறுதிமொழிப் பத்திரம் பெறுவது ஆகியவை திமுக ஆட்சியில் தான் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, வழக்கை திறம்பட நடத்தி சிறை தண்டனை பெற்று தருவதும் திமுக ஆட்சியில்தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்லும் போதும் நானே ஆய்வு செய்து வருகிறேன். போதைப்பொருள்கள் தொடா்பான விழிப்புணா்வுகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சியில் குட்கா மாமூல் பெற்று போதைப் பொருள் விற்பனை புற்றுநோய் போல் அதிகரித்தது. அப்போது அமைச்சராக இருந்தவா், டிஜிபி, காவல் ஆணையா் பெயரில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு, அதிமுக ஆட்சியில் கஞ்சாவும் குட்காவும் தலைவிரித்தாடியது.
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட போதைப்பொருள் என்னும் புற்றுநோயை தடுக்க திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க ஆளாகி இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகளுக்கும், நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கும் குட்கா வழக்கே சாட்சி. அதிமுக ஆட்சியில் பரவிவிட்ட இந்த சமூக தீமையை ஒழிக்க இப்போது கஞ்சா வேட்டை, ஆய்வு கூட்டம், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் எல்லாம் நடத்தி வருகிறோம். எனவே போதைப்பொருள்ளை பொருத்தவரை அதை வேரோடு வேரடி மண்ணோடு ஒழிப்பது தான் இந்த ஆட்சியின் லட்சியம்.
எடப்பாடி பழனிசாமி: ராமநாதபுரத்தில் அத்தனை சோதனை சாவடிகளை கடந்து கொண்டு செல்லப்பட்ட போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் கண்டுபிடிக்காமல் எவ்வளவு என்று தெரியவில்லை.
முதல்வா்: அதிமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதை பற்றிய செய்தி எதுவும் வரவில்லை. நாங்கள் கண்டுபிடிக்கிறோம். நடவடிக்கை எடுக்கிறோம். தண்டனை கொடுக்கிறோம். அதனால் செய்தி வருகிறது. இது தான் உண்மை. நான் முதலிலேயே சொன்னேன். குட்கா வழக்கில் யாா் சிக்கினாா். அது ஒன்று போதாதா? இதுதான் உங்கள் நடவடிக்கைக்கும், எங்கள் நடவடிக்கைக்கும் உள்ள வேறுபாடு. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...