வாழப்பாடி பகுதியில் வங்காநரி ஜல்லிக்கட்டு: வனத்துறை தடையால் வழக்கொழிந்து வருகிறது

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைநிலத்தில் பயிரிட்ட பயிர்களை மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யும் விவசாயிகள்
வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற வங்காநரி ஊர்வலம். (கோப்புப்படம்)
வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற வங்காநரி ஊர்வலம். (கோப்புப்படம்)

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைநிலத்தில் பயிரிட்ட பயிர்களை மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யும் விவசாயிகள், தை மாதத்தில் மீண்டும் புதிய பயிர் செய்வதற்கு முன் ‘நரி‘ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும்’ என்ற  நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருகிறது. 

இதனால், வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம், ரங்கனுார், கொட்டாவடி, பெரியகிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், மத்துார், தமையனுார், வடுகத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், பொங்கல் பண்டிகை தோறும் வேறெந்த பகுதியிலும் இல்லாத பாரம்பரிய விழாவாக, 200 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காநரி பிடித்து ‘நரியாட்டம்’ எனும் வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். 

ஆண்டு தோறும் பொங்கல் விழாவின் இறுதிநாளான காணும் பொங்கல் கரிநாளன்று, கிராமத்தை ஒட்டியுள்ள குன்றுகள், கரடுகள் மற்றும் புறம்போக்கு தரிசு நிலங்களில் வலையோடு முகாமிடும் கிராம மக்கள், வங்காநரியை பிடித்து, பணமாலை அணிவித்து மேள வாத்தியம் முழங்க கிராமத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர். 

கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் மாரியம்மன் கோயிலுக்கு நரியைக் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்ட பிறகு,  அந்த நரியின் காலில் கயிற்றை கட்டி, கோயில் மைதானத்தில் ஓடவிட்டு மக்களை நரி முகத்தில் விழிக்க செய்கின்றனர். 

நரியாட்டம், வங்காநரி ஜல்லிக்கட்டு என குறிப்பிடப்படும் இவ்விழாவை சுற்றுப்புற கிராம மக்கள் திரண்டு வந்து கூடி நின்று ரசித்து மகிழ்கின்றனர். விழா நடத்திய பிறகு, பிடிபட்ட வங்காநரியை மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டு விடுகின்றனர்.

200 ஆண்டுகளுக்கு மேலாக, வங்காரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்திய பிறகு தான்,  எருதாட்டம், விளையாட்டு போட்டிகளை நடத்தி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி  நிறைவு செய்வதை, இன்றளவும் இந்த  கிராமங்களில் மக்கள் வழக்கமாக தொடர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே, வங்காநரி வனவிலங்கு பட்டியலில் உள்ளதால், இந்தநரியை பிடித்து கிராமத்திற்கு கொண்டு சென்று வழிபடுவதற்கும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்துவிட்டது.  இருப்பினும், முன்னோர்கள் வழியாக தொடர்ந்து வரும் பாரம்பரிய விழாவான வங்காநரி வழிபாடு மற்றும்  ஜல்லிக்கட்டு நடத்துவதை கைவிட மனமில்லாத  வாழப்பாடி பகுதி கிராம மக்கள், வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதை தொடர்ந்து வருகின்றனர். 

வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம மக்களுக்கு வனத்துறை அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர். கடந்த இரு ஆண்டாக வங்காநரி பிடித்து வழிபட்டாலோ, ஜல்லிக்கட்டு நடத்தினாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், 7 ஆண்டு வரை சிறை தண்டனைக்கு ஆளாக நேரிடும் எனவும்  வனத்துறையினர் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமப்புற தரிசு நிலங்களில் வாழும் வங்காநரியை பிடித்து எவ்விதத்திலும் துன்புறுத்தாமல் கிராத்திற்கு கொண்டு சென்று வழிபாடு நடத்தி, மக்களுக்கு காண்பித்த பிறகு மீண்டும் பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று விடப்படுகிறது.  இந்த பாரம்பரிய விழா மறையாமல் தொடர்வதற்கு, விதிக்கப்பட்ட தடையை நீக்கி வனத்துறை அனுமதிக்க வேண்டுமென, கிராம மக்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடதக்கதாகும்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com