7 கி.மீ. தொலைவுக்குள் தேர்வு மையம்: பொதுத்தேர்வெழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவெடுத்திருக்கிறது.
பொதுத்தேர்வெழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
பொதுத்தேர்வெழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி


சென்னை: தமிழகத்தில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்காக அதிக நேரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவெடுத்திருக்கிறது.

அரசு தேர்வுகள் இயக்குநரகம் எடுத்திருக்கும் இந்த முடிவின்படி, ஒரு மாணவர் பத்தாம் அல்லது பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுத அதிகபட்சமாகவே 7 கிலோ மீட்டர் தொலைவுக்குத்தான் பயணம் செய்யும் வகையில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்வை எழுதவிருக்கும் 8.8 லடச்ம் மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 3,200 தேர்வு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் 10 லட்சம் மாணவர்களுக்கு 4,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிகபட்சமாக 10 கிலோ மீட்டருக்குள் தேர்வு மையம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதலாக 500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு, அதிகபட்சமாக 7 கிலோ மீட்டர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேர்வுகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் என இந்த ஆண்டு கூடுதலாக 100 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மேலும், குறைந்தபட்ச மாணவர்கள் எண்ணிக்கை என்பதிலிருந்து விலக்கு அளித்து, அனைத்து மலைப்பகுதிகளில் இருக்கும் பள்ளிகளையும் தேர்வு மையங்களாக அமைக்கவும், மாணவர்களுக்கு பயணிக்கும் நேரத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல கிலோ மீட்டர் பயணம் செய்து தேர்வெழுதும் சிக்கலில் இருந்து தப்பிப்பார்கள் என்று பள்ளிகள் தரப்பிலும் கருத்துகள் நிலவுகின்றன.

இதனால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மாணவர்கள் தப்பிக்கவும், விரைவாக தேர்வு மையங்களுக்குச் செல்லவும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com