பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின்
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 03.06.2021 அன்று கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பில், 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இம்மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை இன்று நேரடியாகச் சென்று ஆய்வு செய்த முதல்வர் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பசுமைக் கட்டடக் கட்டமைப்பாக இம்மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட ஐந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, சிட்டி லிங்க் சாலை, நேதாஜி ரோடு மற்றும்  வேளச்சேரி பிரதான சாலை ஆகிய 6 சாலைகளில் ரூ.16.44 கோடி மதிப்பில் 3047 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதை முதல்வர் ஆய்வு செய்தார்.

இந்த 6 சாலைகளில் ஐந்து பர்லாங் சாலை, பிள்ளையார் கோயில் தெரு மற்றும் செங்கேணி அம்மன் கோயில் தெரு ஆகிய 3 சாலைகளில் பணிகள் முழுவதும் முடிவுற்றுள்ளன. சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை ஆகிய சாலைகளில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வேளச்சேரி பிரதான சாலையில் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த  6 சாலைகளில் இதுவரை 2398  மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளன. முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 157-இல் உள்ள ஆற்காடு சாலையில் ரூபாய் 27.40 லட்சம் மதிப்பில் 475 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மனப்பாக்கம் கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய உட்புறச் சாலையாகும். முதல்வர் இச்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையில் தடுப்புகளை அமைத்துப் பணிகளை மேற்கொள்ளவும், சாலைகள்  அமைக்கப்படும்பொழுது தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவும், அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து சாலையின் தரத்தை உறுதி செய்யவேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com