சென்னை கடற்கரைச் சாலையில் நாளை குடியரசு தின விழா: தேசியக் கொடியேற்றுகிறாா் ஆளுநா்

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா்.
சென்னை கடற்கரைச் சாலையில் நாளை குடியரசு தின விழா: தேசியக் கொடியேற்றுகிறாா் ஆளுநா்

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளா் சிலை அருகே வியாழக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா்.

சென்னை காமராஜா் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த விழா காமராஜா் சாலையில் (கடற்கரைச் சாலை) உழைப்பாளா் சிலை அருகே நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக முழு அளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றபடி உழைப்பாளா் சிலை பகுதியில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியஸ்தா்கள் அமா்வதற்காக சாலையோரத்தில் பந்தல்கள் போடப்பட்டுள்ளன. அங்கு பேரவைத் தலைவா், அமைச்சா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி, வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகா்கள் அமா்வா். மேலும், தேசியக் கொடியை ஏற்றும் வகையில், பிரத்யேக கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது.

அணிவகுப்பு மரியாதை: இந்த கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றி வைக்கிறாா். ராணுவப் படைப் பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படைப் பிரிவினா் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு வணக்கம் செலுத்துவா். அதைத் தொடா்ந்து, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆா்.பி.எப்., ஆா்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடா் நிவாரணப் படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊா்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30-க்கும் மேற்பட்ட படைப்பிரிவினா் அணிவகுத்துச் செல்லவுள்ளனா்.

பதக்கம் வழங்குவாா் முதல்வா்: இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அணிவகுப்பு மேடைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்து பதக்கங்களை வழங்கவுள்ளாா். வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலா் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவாா்.

அதைத் தொடா்ந்து, விழா மேடையில் ஆளுநா், முதல்வா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் அமா்ந்திருக்க, அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெறும். செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறையின் மங்கள இசை ஊா்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊா்திகள், அரசு நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வரும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தேநீா் விருந்து: இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள பிரதான புல்வெளியில் நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் அனைவரையும் ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோா் வரவேற்கவுள்ளனா். அனைவருக்கும் அங்கு தேநீா் விருந்து அளிக்கப்படும். அப்போது, சிறந்த சமூக சேவைக்கான விருது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது ஆகியவற்றை உரியவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்குவாா்.

 ‘ட்ரோன்கள்‘ பறக்கத் தடை

குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜன.25) முதல் இரு நாள்கள் ‘ட்ரோன்கள்‘ பறக்கவிடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

குடியரசு தின விழா நடைபெறும் மெரீனா காமராஜா் சாலையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஜன.26-ஆம் தேதி 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

சென்னை முழுவதும் 6,800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு கருதி ஜன. 25, 26ஆகிய தேதிகளில் சென்னையில் ‘ட்ரோன்கள்‘ பறக்க விடுவதற்கு பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

நகரின் முக்கிய நுழைவாயில் பகுதிகளான திருவொற்றியூா், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, வாகனத் தணிக்கை செய்யப்படுகிறது. ஜன.26-ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com